நெல்லை: முன்னுதாரணமாக விளங்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் பெருமிதம்
”மாணவர்களின் இப்பணிகள் மற்ற மாணவர்களின் செயல்பாடுகளை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல உதாரணாமாக அமையும் என அப்பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம்”
நெல்லை சந்திப்பில் 1859 ஆம் ஆண்டு முதல் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி பாரதியார், புதுமைப்பித்தன், வ.உ. சிதம்பரனார் என சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் படித்த பெருமைக்குறியது. இத்தியாகிகளை போற்றும் வகையில் இன்றளவும் அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றை கொண்டாடி வருவதுடன் மாணவர்கள் மத்தியில் தியாகிகள் குறித்த பெருமையையும் எடுத்துரைத்து வருகின்றனர். 150 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் 6 ம் வகுப்பு தொடங்கி 12 ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுமார் 1,400 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்ததும் +2 மாணவர்கள் பள்ளியை விட்டு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு எதிராகவும், அவர்களை மதிக்காமலும் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பள்ளி உபகரணங்களை சேதப்படுத்துதல் போன்ற ஒழுங்கீனமான செயல்களை செய்வதை காணொளிக் காட்சியாக சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. இந்தச் சூழலில், நெல்லையில் மகாகவி பாரதியார் பயின்ற பள்ளியான மதுரை திரவியம் தாயுமானர் இந்துக் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் +2 மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியான செயல்களை செய்து உள்ளனர்.
+2 வில் D பிரிவில் பாரதியார் பயின்ற வகுப்பறையில் பயிலும் மாணவர்கள் தங்கள் வகுப்பறையை சுத்தம் செய்து கதவு ஜன்னல் அனைத்தையும் சுத்தப்படுத்தி சுவற்றுக்கு வர்ணம் பூசிஅழகுப்படுத்தி உள்ளனர். அதே போல தாங்கள் அமரும் இருக்கைகள், டெஸ்க்குகள் அனைத்திற்கும் வார்னிஷ் செய்து புதுப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு மாணவர்கள் வகுப்பறைக்கு வரும் பொழுது வகுப்பறை இருந்ததை விட மிக பிரம்மாதமாக மாற்றி அமைத்துள்ளனர். குறிப்பாக இந்த பணிகள் அனைத்தையும் மாணவர்கள் தாங்களாகவே முன் நின்று செய்துள்ளனர். இது மற்ற மாணவர்களின் செயல்பாடுகளை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல உதாரணாமாக அமையும் என அப்பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம் கொண்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும் பொழுது, நாங்கள் படிப்பை முடித்து பள்ளியை விட்டு செல்கிறோம். எங்களை பின் தொடர்ந்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை வரவேற்கும் விதமாக வகுப்பறையை சுத்தப்படுத்தி கொடுத்து உள்ளோம். அதோடு மட்டுமின்றி இதே போல வகுப்பறையையும் உபகரணங்களையும் பராமரித்து சுத்தப்படுத்தி அவர்களும் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பன் என்று தெரிவித்தனர், மேலும் சமீபத்தில் சில பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் முன்பு தவறாக செயல்படுவதை பார்க்கிறோம். மாணவர்களின் மீதான இந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக நாங்கள் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளோம். எங்கள் வகுப்பறைக்கு கூடுதலாக மின்விசிறி, மின் விளக்கு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். படித்து முடித்து நல்ல நிலைக்கு வரும் போது கூடுதலாக எங்கள் பள்ளிக்கு வேண்டிய உதவிகளை செய்ய முடிவு எடுத்துள்ளோம். அனைத்து பள்ளி மாணவர்களும் இதேபோல் ஒற்றுமையாக இருக்க கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்,
அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் இப்பள்ளி மாணவர்களின் இந்த செயல் அவர்கள் மீதான மதிப்பை உயர்த்தும் வகையிலும், மற்ற பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, வெறும் படிப்பு மட்டுமே என்றில்லாமல் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு விதையை ஒரு மாணவர் விதைப்பதன் மூலம் பல நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை..