குமரியில் தென் மேற்கு பருவ காற்று சீசன் தொடக்கம் - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
காற்று அதிகமாக வீசும் கலிபோர்னியா நாட்டிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென் மேற்கு பருவ காற்று வீச துவங்கி உள்ளதால் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. 250 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகள் மூலம் தினசரி 5000 மெகாவாட்க்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது.
தமிழகத்தில் அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவையின் அளவு சுமார் 15,500 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவையை காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். காற்றாலைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை மாவட்டங்களில் உள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒருபகுதியை, அதை அமைத்த நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு பகுதியை மின்வாரியத்திற்கு விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்யும் மின்சாரத்தை, வாரியம் ஒரு யூனிட், ரூ.2.70 முதல் ரூ.4.16 வரை கொடுத்து வாங்கி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆண்டிற்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுகள் இயற்கையாகவே கொண்டு உள்ளது. காற்று அதிகமாக வீசும் கலிபோர்னியா நாட்டிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது . இந்தியாவில் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஆரல்வாய்மொழி, முப்பந்தால், சென்பகரமன்புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 225 கிலோ வாட், 400 கிலோவாட், 500 கிலோவாட், உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட காற்றாலை இயந்திரங்கள் மூலம் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தென்மேற்கு பருவ காற்று சீசன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பலத்த காற்று வீசும் காலங்களாகும். இக்கால கட்டங்களில் அதிக அளவு மின் உற்பத்தி இப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு காற்றாலை மூலம் சுமார் 3500 யுனிட் வரை மின்சாரம் உற்பத்தி தொடங்கி உள்ளது .சாதாரண நாட்களில் காற்றாலை மூலம் சுமார் 800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில் சீசன் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இந்த சீசனில் மட்டும் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் காற்றாலைகள் நிர்வாகங்கள் திட்ட மிட்டு உள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்