வறுமை காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர்; சிவகாசியில் அதிர்ச்சி - செவிலியர்கள் உட்பட 5 பேர் கைது
வறுமை காரணமாக பெற்ற குழந்தையை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மார நேரி ஈசுவரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (28). இவரது மனைவி பஞ்சவர்ணம் (24). இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பாண்டீஸ்வரனும், பஞ்சவர்ணமும் அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் பஞ்சவர்ணம் மீண்டும் கர்ப்பமடைந்து உள்ளார். மேலும் கடந்த 24 ஆம் தேதி இவர்களுக்கு 4வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஏழ்மையில் இருக்கும் நிலையில் 4 பிள்ளைகளை வளர்க்க முடியாது என எண்ணிய அவர்கள் இந்த குழந்தையை விற்க முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும் இது தொடர்பாக மார நேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை செய்து வரும் அஜிதா என்பவருக்கு தெரிய வரவே அவர் தெரிந்த ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் குழந்தையை கொடுத்தால் பணம் தருவார் எனவும் கூறியுள்ளார். பின்னர் பாண்டீஸ்வரனும், பஞ்சவர்ணமும் சேர்ந்து நெல்லையில் வங்கி அதிகாரியான ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ஐரின் ஆகியோரிடம் குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் விருதுநகர் வந்த அவர்களுக்கிடையே இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது பஞ்சவர்ணத்தின் தாய் மாரியம்மாளுக்கு தெரிய வந்துள்ளது. அவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இருவரும் சேர்ந்து தனது பெண் குழந்தையை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக மாரநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தையை வாங்கிய ஜார்ஜ் அவரது மனைவி ஐரின் மற்றும் குழந்தையை விற்க காரணமாக இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த அஜிதா, முத்துமாரி ஆகிய 6 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் பஞ்சவர்ணம், பாண்டீஸ்வரன், ஐரின், அஜிதா, முத்துமாரி ஆகிய 5 பேரை கைது செய்தனர், மேலும் இவ்வழக்கில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. வறுமை காரணமாக பெற்ற குழந்தையை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.