நெல்லையில் பள்ளி கழிப்பறை இடிந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழப்பு 3ஆக உயர்வு
அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சுதீஷ் என்ற மாணவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
நெல்லை சந்திப்பில் இருந்து டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி, இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவெளி விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர், அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர், அதில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்து உள்ளார், இந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.
100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர், இருப்பினும் மாணவர்கள் தங்களது சக மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் பள்ளியில் கற்களை கொண்டு எரிந்தும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் தங்களது கோபங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, பள்ளியின் கழிப்பறை சுவர் கட்டப்பட்ட இடத்தில் பவுண்டேசன் என்பது இல்லை என தெரிகிறது, இதனாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது, மருத்துவமனையிலும் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன் என தெரிவித்தார். விசாரணையில் அன்பழகன், விஸ்வரஞ்சன் ஆகிய இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சுதீஷ் என்ற மாணவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மேலும் சஞ்சய், சேக் அபுபக்கர், இசக்கிபிரகாஷ், அப்துல்லா ஆகிய 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உறுதி தன்மை மற்றும் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, முழு விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ABP NADU செய்தி எதிரொலி: ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கியது