தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு 8 கோடி மதிப்புள்ள கொக்கைன் கடத்த முயற்சி - 8 பேர் கைது
இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர், பீடி இலை, கடல் அட்டை போன்ற பொருள்கள் பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஹொகைன் போதை பவுடர் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கொக்கைன் கடத்த முயன்றதாக காவலர் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ கொக்கைனை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட குற்றப்பிரிவு போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். பிடிபட்டவர்கள் இலங்கைக்கு கொக்கைன் கடத்த இருந்தது குறித்து தெரிவித்ததாகவும், கடத்தலுக்கு தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் மூளையாக செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். தலைமறைவாக இருந்த காவலர் பாலமுருகனை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாம் விசாரித்ததில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த சூரியகுமார்(27) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள போதை பவுடர் பாக்கெட்டுகள் இருந்துள்ளது. இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப் பொருள் நைஜீரியா நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு கடத்தி வரப்பட்டது என்றும், அதனை ராமேஸ்வரத்தில் உள்ள சில நபர்களுக்கு கொடுப்பதற்காக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சூரியகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் எம்.ஆர்.பி.நகரை சேர்ந்த அங்குரதராம் (36), சின்னவன் பிள்ளை தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் சேக் (36), பாம்பன் பகுதியை சேர்ந்த சாதிக் அலி (27), அக்காள் மடத்தை சேர்ந்த மனோஜ் (21) உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், இவர்கள் சொன்ன தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் பணிபுரியும் போலீஸ்காரர் பாலமுருகன் உட்பட 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களுக்கும் இந்த கடத்தலில் தொடர்பிருப்பதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறிய மாவட்ட தடய அறிவியல்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில் பிடிபட்ட போதைப்பொருள் ஹொகைன் எனப்படும் உயர்ரக போதை பவுடர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதனுடைய சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 8 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர், பீடி இலை, கடல் அட்டை போன்ற பொருள்கள் பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஹொகைன் போதை பவுடர் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ராமேஸ்வரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் புண்ணிய தலமாக இருந்து வரும் நிலையில், இலங்கைக்கு கடத்த உதவும் மையப்புள்ளியாக ராமேஸ்வரம் இருந்து வருவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய கடலோர பாதுகாப்பு படையினரும், தமிழக கடலோர காவல் படையினரும் இலங்கை பகுதியை ஒட்டியுள்ள ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் தவறாமல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் கண்களில் எல்லாம் மண்ணை தூவி விட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை கடத்தல்காரர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தி வருவது தடுக்கப்பட வேண்டிய விஷயம் என என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஒரு புண்ணிய ஸ்தலம் கடத்தல் தளமாக மாறி வருவது அனைவரையும் வருத்தமடையச் செய்கிறது.