தென்மாவட்டங்களை சூழ்ந்த மழை வெள்ளம்; தூத்துக்குடிக்கு பதிலாக மதுரையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நகரகப்பகுதிகள் தொடங்கி கிராமப் பகுதிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நகரகப்பகுதிகள் தொடங்கி கிராமப் பகுதிகள் வரை அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் அதிகப்படியான மழை வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காராணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறக்கப்படவேண்டிய விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டும் . மெழுகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், “திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி கொள்ளளவு நீர்வரத்து உள்ளதாலும், உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் இன்று (17.12.2023) வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.