(Source: ECI/ABP News/ABP Majha)
தூத்துக்குடி பயணிகளை ஏமாற்றும் ரயில்வே; அறிவித்து ஒரு மாதமாகியும் இயக்கப்படாத பாலருவி ரயில்
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்க மத்திய ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே ,பரிந்துரை செய்துள்ள ரயிலையும் இயக்க வேண்டும்.
மும்பை - தூத்துக்குடி இடையே கடந்த நான்கு மாதங்களாக இயக்கப்பட்டு வந்த வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் நீட்டிப்பு செய்யப்படவில்லை. மேலும், பாலக்காடு திருநெல்வேலி பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாதம் ஆகியும் இதுவரை நீட்டிக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி தொழில் நகரம் மற்றும் துறைமுக நகரமாக இருந்த போதிலும் போதுமான ரயில்வே வசதி இல்லை என்பது பயணிகளின் நீண்ட கால குறையாக இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வகையில் அண்மை காலமாக சில கூடுதல் ரயில் சேவைகள் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மும்பை இடையே முதல்முறையாக கடந்த மே ஜூன் மாதங்களில் கோடைகால வாராந்திர சிறப்பு முறையில் மத்திய ரயில்வே நிர்வாகம் இயக்கியது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மும்பை இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் மத்திய ரயில்வே அறிவித்தது. இந்த சிறப்பு ரயில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இயக்கப்பட்டன. மும்பையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது.
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்று பெற்ற போதிலும் அந்த ரயில் செப்டம்பர் மாதத்துக்கு நீட்டிக்கப்படவில்லை. கடைசியாக மும்பையிலிருந்து கடந்த ஒன்னாம் தேதி தூத்துக்குடியில் இருந்து 3ஆம் தேதியும் சூப்பர் பாஸ்ட் சிறப்புரையில் இயக்கப்பட்டது. அதன் பிறகு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயிலை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதே போன்று பாலக்காடு- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த 17ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து அந்த ரயிலின் புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலுடன் அறிவிக்கப்பட்ட மற்ற ரயில்கள் இயங்க தொடங்கி உள்ள நிலையில் பாலருவி இன்னும் தூத்துக்குடி வரை இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கத்தினர் கூறும்போது, ”பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை இயக்கப்படவில்லை, இந்த ரயிலுடன் அறிவிக்கப்பட்ட குருவாயூர் மதுரை ரயில் இயங்க துவங்கி உள்ளது. அதேபோன்று எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாரம் இருமுறை இரயில் வரும் 25ஆம் தேதி முதல் இயங்க உள்ளது.அதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. எனவே பாலருவி ரயிலை விரைவாக தூத்துக்குடி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி கோவை இணைப்பு முறை ரத்து செய்யப்பட்டு நிலையில் அதற்கு மாற்றாக தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்க மத்திய ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. அந்த ரயிலையும் இயக்க வேண்டும்” என்கின்றனர்.