Kanyakumari: 13 ஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் தடையை தீவிரமாக கடைபிடித்த மாவட்டம் கன்னியாகுமரி...!
Kanyakumari: 13 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் பயன்படுத்த தடையை தீவிரமாக கடைப்பிடித்த மாவட்டம் கன்னியாகுமரி.
நாடு முழுவதும் நெகிழி பயன்பாடு தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன்பே கன்னியாகுமரியில் நெகிழி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது நெகிழ்ச்சியானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நெகிழி என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னுவால் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த பிளாஸ்டிக் தடை என்பது அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் இந்த சட்டம் தமிழகத்தில் முதல் முறையாக முழு வீச்சில் அமலுக்கு வந்தது. இந்த சீரிய திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்பட்டது. பின்னர், கடுமையான சட்ட திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இதுபோன்ற நீண்ட நெடிய முயற்சிக்குப் பின் நெகிழி இல்லாத மாவட்டமாக குமரி மாவட்டம் உருவெடுத்தது. கன்னியாகுமரியை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு படிப்படியாக அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக குமரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் ஒரு சில பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் விற்பனை என்பது செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் ஆபத்தை அறியாமல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அதிகாரிகள் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையிலும் அதனை விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கிலும், பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு பயன்படுத்தும் நபர் மீதும் விற்பனை செய்யும் நபர் மீதும் கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் நெகிழி பயன்பாடு தடை அமலுக்கு வந்துள்ளது. நெகிழியை பயன்படுத்தும் மக்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நெகிழி இல்லா இந்தியா என்ற நெடிய இலக்கு எளிய இலக்காக மாறும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்