நெல்லை, தென்காசியில் சொதிச்சோறும், கிடா விருந்துமாக களைகட்டும் உள்ளாட்சித் தேர்தல்
’’வெள்ளிக் கிழமை என்றால் நெல்லை மண்ணுக்கு உரிய சொதி சாப்பாடு, மற்ற கிழமைகளில் கிடா வெட்டி ஆட்டுக் கறி, சிக்கன் என விருந்து என உள்ளாட்சித் தேர்தல் களைகட்டுகிறது’’
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக். 6, 9 என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை இரண்டு மாவட்டங்களில் 19 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் நெல்லை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களும், தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களும் அடங்கும். முதல் கட்டமாக, அக். 6ம் தேதி நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, மானூர், பாளை, பாப்பாக்குடி ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிரொலியாக திருமண மண்டபங்கள் களைகட்டி வருகின்றன. பூ, மாலை விற்பனையும் அதிகரித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக அக்டோபர் 9 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஒன்றியங்களுக்கும், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 19 ஒன்றியங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கியது. வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாள் மட்டும் சற்று மந்தமாக இருந்தது.
கடந்த 2 நாட்களாக வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் கிராமம் சார்ந்தது என்றாலும், அந்த பதவிகளுக்கு கிராம அளவில் உயரிய மதிப்பும், மரியாதையும் இருக்கும். இதனால் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் சூடு பிடித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் நெல்லையின் மையப் பகுதியான சித்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மனு தாக்கல் செய்ய வருவோர் வாகனங்களில் திரண்டு மாலை, மரியாதையோடு வருகின்றனர். மனு தாக்கல் செய்ய வருவோருடன் கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தினமும் திரண்டு வருகின்றனர். அவர்களுக்கு பாளையின் முக்கிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை பிடித்து மதியம் நேரங்களில் அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது. செவ்வாய், வெள்ளிக் கிழமை என்றால் நெல்லை மண்ணுக்கு உரிய வாசனையான சொதி சாப்பாடு, மற்ற கிழமைகளில் கிடா வெட்டி ஆட்டுக் கறி, சிக்கன் என விருந்து பரிமாறப்படுகிறது.
பெண்களும் தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அவர்களுக்கு மாலை, மரியாதை, சால்வை அணிவிப்பு, பட்டாசு வெடித்தல் என உள்ளாட்சி தேர்தல் அமர்க்களப்படுகிறது. இதனால் மாலை விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் முன்பு நடந்து சென்று வாக்கு சேகரித்த நிலை மாறி எம்எல்ஏ, எம்பி தேர்தலை போன்று வாக்கு சேகரிக்கவும் ஜீப் தயார் செய்யப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் சாலை வசதி இல்லாத இடங்களில் பயணிக்க ஜீப் தான் சரியாக இருக்கும் என வேட்பாளர்கள் கூறுகின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்த பலரும் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது.