மஞ்சப்பை விருது: நெல்லை ஆட்சியர் அறிவிப்பு! பிளாஸ்டிக் இல்லாத வளாகம் உருவாக்க பள்ளிகள், கல்லூரிகளுக்கு வாய்ப்பு!
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
மஞ்சப்பை விருது என்பது, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மேலும் விண்ணப்பிக்க இறுதி நாள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களை ஊக்குவித்தல். பல்வேறு மாவட்டங்களில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 15, 2026 என்பது ஒரு சில மாவட்டங்களுக்கான விண்ணப்பத்திற்கான இறுதி நாளாகும். உங்கள் மாவட்டத்தில் உள்ள காலக்கெடுவை சரிபார்க்கவும்.
சில பள்ளிகள் இந்த விருதை வென்றுள்ளன, உதாரணமாக காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றது
இந்த நிலையில், மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான "மஞ்சப்பை விருது”களை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கைப்பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மாநில அளவில் இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், (www.tirunelveli.nic.in) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















