Ondiveeran Memorial Day: யார் இந்த மாவீரன் ஒண்டிவீரன்..? ..வரலாறு சொல்வது என்ன?
”ஒண்டியாக ( தனியாக) சென்று எதிரிகளை அழித்தார் என்பதால் இவர் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டார்”
யார் இந்த விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்..?
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக சுந்தரலிங்கம் என்பவர் இறுதியில் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒருபுறம் என்றால் மற்றொரு புரம வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் பாளையத்தில் மாவீரன் பூலித்தேவன் வெள்ளையரை எதிர்த்து போரிட்டார். நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில், ஆற்காடு நவாப் வரி வசூலித்து வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றனர். பூலித்தேவனிடம் வரி கட்டுமாறு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு படைத்தளபதி ஒண்டிவீரன் அரசனான பூலித்தேவன் மறுத்து விட்டார்.. வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் மாமன்னர் பூலித்தேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரன் ஒண்டிவீரன்.
அந்நிய நாட்டினர் ஆங்கிலேயரின் போக்கை கண்டு 1755 ஆம் ஆண்டில் பூலித்தேவன் படைத்தளபதி ஒண்டிவீரன் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு, தோற்கடித்து மதுரைக்கு திருப்பி அனுப்பினர். ஆனால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை இறக்கினர். இதை அறிந்த கொண்ட பூலித்தேவன், ஆங்கிலேயர்களின் சதி திட்டங்களை முறியடிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதை முறியடிக்க கூடிய சரியான ஆள் ஒண்டிவிரன் என முடிவு செய்தார். அப்போது ஆங்கிலேயரின் முகாமிற்கு தனி ஒரு ஆளாக சென்று, வெடி மருந்துகளை அழிக்கும் பொறுப்பை ஒண்டிவீரனிடம் பூலித்தேவன் ஒப்படைத்தார்.
கை துண்டிப்பும், சிதைந்த கோட்டையும்:
ஒண்டிவீரன், இரவின் ஆங்கிலேயரின் முகாமிற்கு சென்று இலைதழைகளை மூடிக்கொண்டு தலைமறைவாக இருந்தார். அப்போது குதிரையை கட்டுவதற்காக வந்த ஆங்கிலேயர் ஒருவர், இலை தலைகளுடன் தரையில் மறைந்திருந்த ஒண்டிவீரன் கையில் ஈட்டியை குத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் போட்டால் ஆங்கிலேயர் தெரிந்து கொள்வர் என எண்ணி, வலியை பொறுத்துக் கொண்டார். ஈட்டியை பிடுங்கினால் குதிரை அனைவரையும் எழுப்பி விடும் எண்ணி, ஈட்டியை புடுங்காமல், தன் கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின் பீரங்கிகளை ஆங்கிலேயர்களின் கோட்டை பக்கமே திருப்பி வைத்து விட்டு, ஒலி எழுப்பி விட்டு புறப்பட்டார் ஒண்டிவீரன். சத்தம் கேட்ட ஆங்கிலேயர்கள் எதிரிகள் வந்துவிட்டனர் என எண்ணி, பீரங்கிகளை இயக்கினர். ஆனால் பீரங்கிகள் ஆங்கிலேயரின் பக்கமே திரும்பி தாக்கியதால், ஆங்கிலேயர்கள் கோட்டை சிதைந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஒண்டியாக (தனியாக) சென்று எதிரிகளை அழித்தார் என்பதால் இவர் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டார்.
சுதந்திர போராட்ட காலங்களில் பல சுதந்திர போராட்ட வீரர்கள் நெல்லை மண்ணில் உருவாகியுள்ளனர். அது அரசனாக இருந்தாலும் வீரர்கள் மற்றும் பின்னால் வந்த தியாகிகள் போன்றோர் இந்த மண் வீரம் நிறைந்த மண் என்பதை அந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டியவர்கள். அவர்களுடைய சரித்திரம் சுதந்திர போராட்ட வரலாற்றில் மறைக்கப்படாமல் இருப்பதற்காக நினைவு சின்னங்களாக மணிமண்டபங்களாக எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஒண்டிவீரனுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என அப்போதைய திமுக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. பூலித்தேவன் மறைவிற்கு பிறகும், அவர்களின் மகன்களுக்கு உதவியாக இருந்து ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றியவர் ஒண்டிவீரன், ஆனால் அவரது கடைசி காலம் மற்றும் அவரது மரணம் குறித்து, தெளிவான தகவல்கள் என்பது இல்லை. இந்த நிலையில் ஒண்டிவீரனின் தியாகத்தை போற்றும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் அவரது உருவம் மற்றும் பெயர் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.