நெல்லை மாவட்டத்தின் வரப்பிரசாதமான தாமிரபரணியின் வெள்ளப்பெருக்கை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பம்..!
பேட்டையில் தானியங்கி காலநிலை கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநகர பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம் சுற்றுச்சூழல் மாசு வெயிலின் தாக்கம் போன்றவைகளை கண்காணிக்க முடியும்.
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை பயணித்து கடலில் கலக்கிறது. இந்த நதி 5 மாவட்ட குடிநீருக்கு ஆதாரமாக மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய நிலங்களுக்கும் முழுமையாக பயன் தருகிறது. குறிப்பாக மழை காலங்களில் தாமிரபரணி நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் வரை வெளியேறியதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோர பகுதிகள் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் 88 லட்சம் மதிப்பீட்டில் தனியார் அமைப்பு உதவியுடன் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ள ஓட்டத்தை கண்டறிந்து பாதிப்புகளை தடுக்கும் வகையில் தடுத்து தகவல் பெறும் வகையிலான வெள்ள கண்காணிப்பு கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு ஆகியவை இணையும் இடமான ஆலடியூர் தொடங்கி தாமிரபரணி நதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லும் இடமான முறப்பநாடு வரை 10 இடங்களில் வெள்ள பாதிப்புகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளின் மூலம் தாமிரபரணி ஆற்றில் வரும் நீரின் அளவு, வெள்ளத்தின் போது நீரோட்டம், தண்ணீரின் வேகம் உள்ளிட்டவைகளை கணிக்க முடியும். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதி செல்லும் முக்கிய பாலங்களில் 10 இடங்களில் இந்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகளில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் அதிநவீன சென்சார் கேமரா மற்றும் சென்சார் போர்டுகள் இடம்பெற்றுள்ளது. இந்த கருவிகள் இயங்குவதற்கு தேவையான மின்சாரம் பெறுவதற்கு சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் பெரும் சேதத்தை தவிர்க்கும் வகையில் இந்த கருவிகள் மூலம் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ள கண்காணிப்பு கருவிகளில் இருந்து பெறப்படக்கூடிய தகவல்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து தண்ணீரின் வேகம் தண்ணீருடைய அளவு மற்றும் தண்ணீர் செல்லும் பாதைகளை கணக்கிட்டு வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெள்ள காலங்களில் பாலங்களில் நின்று பொதுமக்கள் தண்ணீரை வேடிக்கை பார்த்தாலும் சென்சார் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெள்ள கண்காணிப்பு கருவிகள் செயல்பாட்டுக்கு வரும் என அதனை அமைத்து வரும் தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தவிர நெல்லை மாநகர பகுதிகளில் பெய்யும் மழையின் அளவுகளை தரவுகளாக குறிக்கும் வகையில் புதிதாக நான்கு அதிநவீன மற்றும் தானியங்கி மழை மாணிகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரின் நான்கு திசைகளான பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருமால் நகர் மற்றும் டார்லிங் நகர் பகுதிகளில் புதிய மழைமாணிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேட்டை பகுதியில் தானியங்கி காலநிலை கண்காணிப்பு மையமும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தானியங்கி மையத்தின் மூலம் மாநகரப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, காற்றின் வேகம் சுற்றுச்சூழல் மாசு வெயிலின் தாக்கம் போன்றவைகளை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.. இந்த புதிய தொழில்நுட்பம் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் இதனை பயன்பாட்டுக் கொண்டு வந்து அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.