Nellai: நுரைபொங்க தாமிரபரணியில் கரைபுரண்டோடும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் - கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
ஒரு நதி இறந்து போனால் அந்த மக்களும் இறந்து போவார்கள். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஆறு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களின் விவசாயத்திற்கும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையி்ல் நெல்லை மாநகர் பகுதியான வண்ணார்பேட்டை, கைலாசபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் இருந்து சாக்கடை கழிவு நீர் நேரடியாக நதியில் கலந்து நதியின் தூய்மையையும், அழகையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
குறிப்பாக இங்குள்ள பாதாளச்சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் நேரடியாக நதியில் கலக்கிறது. இதனால் நதி மாசடைவதுடன் மக்களும் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாவதாக கூறி வருகின்றனர். நதியை காக்க சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களையும், வழக்குகளையும் முன்னெடுத்து வரும் நிலையில் எந்தஒரு தீர்வும் கிடைக்காத நிலையில் மிகுந்த வேதனையில் உள்ளனர். குறிப்பாக 1989 ஆம் ஆண்டு பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் தற்போது வரை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டாம் கட்ட பணிகளுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு 300 கோடி வரை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மாநகரில் உள்ள 55 வார்களில் சேகரிப்படும் பாதாளச்சாக்கடை கழிவநீர் தச்சநல்லூர் ரயில்வே கிராசிங் அருகே பம்பிங் செய்யப்பட்டு பின் ராமையன்பட்டி குப்பை கிடங்கு சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சுத்தரிப்பு செய்யும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த திட்டம் கேள்விக்குறியாகும் வகையில் அனைத்து பாதாளச்சாக்கடை கழிவு நீரும் மணிமூர்த்தீஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருவி போல் பாய்ந்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நதி மாசடையும் சூழலும் உருவாகி உள்ளது. மாசடையும் தாமிரபரணி நதியை மீட்கும் முயற்சியில் தாழையூத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் தொடர்ந்த நிலையில் தொடர்ச்சியாக போராடி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது, "நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீரை கொண்டு செல்ல வேண்டும், ஆனால் அங்கு கொண்டு செல்லாமல் தச்சநல்லூர் அருகே கால்வாய் வழியாக மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது. இது தொடர்பாக பல வழக்குகள் போட்டுள்ளோம். வழக்கில் எந்த கழிவும் தாமிரபரணி நதியில் கலக்கக்கூடாது என சொல்லியிருக்கின்றனர். இதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது நெல்லை மாநகராட்சி நிர்வாகம். மாநகர மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார சூழ்நிலையை தர வேண்டும், ஆனால் அவர்களே இந்த சட்ட மீறலை செய்கின்றனர். தாமிரபரணி நதியை பாதுகாக்க பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தலைமைச்செயலாளர் ஆகியோர் தாமிரபரணியை மாதம் ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.. மாறாக மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலந்து வருகிறது. மேலும் தாமிரபரணி நதி மறு சீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதனை தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மதுரையில் வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வகையில் இருகரையிலும் சுவர் கட்டி உள்ளனர். இதே போன்ற சூழ்நிலையை திருநெல்வேலியிலும் உருவாக்கலாம். ஆனால் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய ஆதரமாக இருக்கும் நெல்லை கால்வாய் மற்றும் பாளையங்கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களுமே நெல்லையின் கழிவுநீர் செல்லும் ஓடையாக தான் பயன்பட்டு கொண்டு இருக்கின்றது. கால்வாயில் கழிவுநீர் கலக்கக்கூடாது என சட்டமே உள்ளது. ஆனால் அனைத்துமே அச்சிட்ட காகிதமாகவே உள்ளது. மக்களுக்கும் நதியை காப்பதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்களும் சேர்ந்து நதியை காப்பதில் சூளரை எடுத்து மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய முடியும். தாமிரபரணி நதியை பாதுகாக்க மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றால் அதனையும் செய்ய தயாராக உள்ளோம். ஒரு நதி இறந்து போனால் அந்த மக்களும் இறந்து போவார்கள். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்" என தெரிவித்தார். மேலும் தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும் எனவும் வருத்தம் தெரிவித்தார்,
இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்டபோது, 4 கோடியில் சிந்துபூந்துறை, வண்ணாரப்பேட்டை, கருப்பந்துறை என மூன்று பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவை செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 300 கோடியில் தொடங்கப்பட்ட பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் 90% முடிவுற்ற நிலையில் வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமை அடையும். மேலும் வரும் அக்டோபர் மாதத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பது முழுமையாக தடுக்கப்படும். இதற்கான தடுப்பு நடக்குகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.