TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
தவெக சார்பில் விஜய் தலைமையில் வரும் டிசம்பர் 16ம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வரும் தேர்தலில் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.
ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம்:
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒரு மாத காலமாக ஒட்டுமொத்த தவெக-வும் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கட்சிப் பணிகளை வேகப்படுத்தியுள்ளார் விஜய்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது அமைந்தது. இந்த நிலையில், வரும் 16ம் தேதி ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.
செங்கோட்டையன் மனு:
செங்கோட்டையன் அளித்த மனுவில் வரும் 16ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் 7 ஏக்கர் அளவு பரப்பளவில் 75 ஆயிரம் பேர் கூடும் வகையில் மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரை பரப்புரையில் விஜய் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் உள்ளது. இது தவெக-வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் தனது அரசியல் பயணத்தை வேகப்படுத்த தொடங்கியுள்ள விஜய்க்கு, செங்கோட்டையனின் வருகை பலமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கொங்கு மண்டலத்தில் தவெக-வின் முக்கிய முகமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார். தவெக-வில் இணைந்த பிறகு ஈரோடு திரும்பிய அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?
தன்னுடைய பலத்தை காட்டுவதற்காகவும் செங்கோட்டையன் தனது பகுதியில் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் வரும் 9ம் தேதி விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அந்த பொதுக்கூட்டம் முடிந்த ஒரு வாரத்திற்குள் அடுத்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
விஜய்யின் இனி வரும் பொதுக்கூட்டங்களில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அந்த மாநில அரசு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. கரூர் சம்பவத்தை கருத்தில் கொண்டு ஈரோடு பெருந்துறையில் அனுமதி கோரியுள்ள செங்கோட்டையனின் மனுவையும் மிக கவனத்துடனே அரசு ஆய்வு செய்யும் என்று கருதப்படுகிறது.
குவியும் ரசிகர்கள் பட்டாளம்:
தலைவராக அல்லாமல் நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை காெண்டவர் விஜய் என்பதால் அவரை காண்பதற்கு பலரும் குவிவது வழக்கம் ஆகும். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்வார்கள் என்று கருதப்படுகிறது.





















