மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிலும் மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் மாணவர்கள் மத்தியில் நடந்த மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கும்பகோணம், பட்டீஸ்வரம், உடையாளூர், பம்பப்படையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூர் பகுதியை சேர்ந்த கவியரசன் (17) இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 11-ம் வகுப்பு மாணவரின் மூக்கில் காயம் அடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இது தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவரின் பெற்றோர் பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மாணவர்களின் நலன் கருதி இருதரப்பினரின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பிலும் மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாணவன் கவிரயரசன் தனது நண்பர்களுடன் மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது 11-ம் வகுப்பு மாணவர் தரப்பினருடன் ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முன்விரோதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4-ந் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு கவியரசன் புறப்பட்டார். அப்போது பட்டீஸ்வரம் கோவில் அருகே தனது நண்பர்களுடன் கவியரசன் சென்ற போது 11-ம் வகுப்பு மாணவர்கள் 12-ம் வகுப்பு மாணவர்களை தாக்கியுள்ளனர். அப்போது இரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் மரக்கட்டையால் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த கவியரசனை அவருடன் வந்த நண்பர்கள் மற்றும் அக்கம்பத்தினர் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் கவியரசனுக்கு சிகிச்சை செய்த போது தலையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் கவியரசன் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் சிங் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கவியரசனை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை பட்டீஸ்வரம் போலீசார் கைது செய்து தஞ்சை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இதற்கிடையில் மாணவன் கவியரசன் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். தொடர்ந்து நேற்று மதியம் மாணவன் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் மேல்சிகிச்சை அளிப்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கவியரசன் மாற்றப்பட்டார். அங்கு 5 பேர் கொண்டு மருத்துவர் குழுவினர், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கவியரசன் உயிரிழந்தார். அப்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு உடலை எடுத்து செல்ல அனுமதிக்காமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவன் கவியரசன் உயிரிழந்தததால் விபரீதங்கள் ஏற்படாதவாறு அந்த மாணவனின் வீடு, பள்ளி மற்றும் பட்டீஸ்வரம் பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.





















