சாதிய அடையாளங்கள் அழிப்பு...‘முன் மாதிரி மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி’ - மற்ற மாவட்டங்களும் முன்னெடுத்து செல்லுமா?
மற்ற மாவட்டங்களும் சாதிய அடையாளங்களை அழித்து மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்தும் விதமாக இதனை முன்னெடுத்து செல்லுமா என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி, வேலியார்குளம், சக்திகுளம் பகுதிகளில் 40 மின்கம்பங்களிலும், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதம்நகர், தருவை, பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் பகுதிகளில் 19 மின்கம்பங்களிலும், அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முடபாலம், திலகர்புரம் ஆகிய பகுதிகளில் 35 மின்கம்பங்கள் உட்பட கடந்த 18 ஆம் தேதி ஒரே நாளில் 94 இடங்களிலும்,
அதேபோல நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பெரும்பத்து பகுதியில் 10 மின்கம்பங்களிலும், வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வள்ளியூர் மற்றும் நம்பியான்விளை ஆகிய பகுதிகளில் 30 மின்கம்பங்கள் மற்றும் 1 நீர்தேக்க தொட்டி, சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வேலியார்குளம், உழவன்குளம், இடையன்குளம் மற்றும் பத்தங்காடு பகுதிகளிலும் 30 மின்கம்பங்களிலும், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் மேலசேவல், நயினார்குளம், தேமாணிக்கப்புரம், கோபாலசமுத்திரம், கொலுமடை போன்ற பகுதிகளில் 25 மின்கம்பங்களிலும் கடந்த 19 ஆம் தேதி 95 இடங்களிலும்,
தொடர்ந்து மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குபட்டி, சீதக்குறிச்சி, இரண்டும் சொல்லான், கட்டாரங்குளம், எட்டான்குளம், தெற்குவாகைகுளம், களக்குடி, திருமலாபுரம், மடத்தூர், ஆகிய பகுதியில் 112 மின்கம்பங்கள், 3 நீர்தேக்க தொட்டிகள், 5 பாலங்கள், 1 மரம், 2 பஸ்ஸ்டாப், 1 கிணறு, 1 குடி தண்ணீர் பை ஆகிய இடங்களிலும், சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சுத்தமல்லி, சங்கன்திரடு, நரசிங்கநல்லூர், பட்டன்கல்லூர் ஆகிய பகுதியில் 30 மின்கம்பங்களிலும், பத்தமடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பத்தமடை பிள்ளையார் கோவில் தெரு, மங்கையர்க்கரசி தெரு பகுதியில் 33 மின்கம்பங்களிலும், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முனைஞ்சிப்பட்டி பகுதியில் 5 மின்கம்பங்களிலும், கடந்த 20 ஆம் தேதி 95 இடங்களிலும் சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர்.
தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழநத்தம் மேலூர், கீழநத்தம் வடக்கூர், கீழநத்தம் தெக்கூர், கீழநத்தம் கீழூர், மணப்படைவீடு, திருத்து, கொம்பந்தானூர், மருதூர், திருமலைகொழுந்துபுரம், செட்டிகுளம் பகுதியில் 42 மின்கம்பங்கள், 1 அடிபம்பிலும், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட லட்சுமியாபுரம் பகுதியில் 21 மின்கம்பங்கள், மற்றும் 1 நீர்தேக்க தொட்டி, 3 பாலங்களிலும், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு புளியம்பட்டி, தெற்கு புளியம்பட்டி, தெற்கு அச்சம்பட்டி, வடக்கு அச்சம்பட்டி, கருப்பனூத்து, மடத்துப்பட்டி, சொக்கநாச்சியார்புரம், தடியன்பட்டி, கலியாவூர், சுந்தன்குறிச்சி, பன்னீர்ஊத்து பகுதிகளிலும் 89 மின்கம்பங்கள், 6 பாலங்கள், 4 நீர்தேக்க தொட்டிகள், 18 விளம்பர பலகைகளிலும், மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தான்தோன்றி பகுதியில் 4 மின்கம்பங்கள், 1 பஸ் ஸ்டாபிலும், முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முக்கூடல் பஜார், சடையப்பபுரம், மயிலப்பபுரம், கம்பலத்தான்தெரு ஆகிய பகுதிகளில் 50 மின்கம்பங்களிலும் என ஒரே நாளில் 240 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்து வருகின்றனர். காவல்துறையினர் தொடர்ச்சியாக எடுத்து வரும் இது போன்ற நடவடிக்கைகளால் தென்மாவட்டங்களில் ஏற்படும் ஜாதிய பிரச்சினைகளை தடுத்து நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையில் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மட்டுமின்றி இதுவரை தூத்துக்குடி மாவட்டத்திலும் மொத்தம் 6078 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது போன்று சாதிய அடையாளங்களை அழித்து அனைத்து தரப்பு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாக திகழ்ந்து வருகிறது. இதனை போன்றே மற்ற மாவட்டங்களும் சாதிய அடையாளங்களை அழித்து மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்தும் விதமாக இதனை முன்னெடுத்து செல்லுமா என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.