தாமிரபரணியாறு - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்ட பணிகள் மார்ச் 2023ல் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் துரைமுருகன்
"குவாரிகாரர்கள் என்னை பார்க்கவில்லை. அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம்" - துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென் மாவட்டங்களில் நடந்து வரும் நீர்வளத்துறை தொடர்பான பணிகளின் நிலை, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை, மற்றும் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம் அதற்கான தீர்வு உள்ளிட்டவையில் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வறட்சி மிகுந்த பகுதிகளை வளமாக்கும் வகையில் புதிய திட்டங்களை தயார் செய்து அதற்கான கருத்துருக்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் பிற துறைகளால் செய்யப்படும் காலதாமதத்தால் நிறுத்தப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ள பிற துறை சார்ந்த அதிகாரிகளையும் அறிவுறுத்தியதுடன் அதற்கான காரணங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் பச்சையாற்றின் குறுக்கே தமிழாக்குறிச்சி என்ற இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பு அணை, பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை பொன்னாக்குடி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,
கடந்த 10 வருடம் எந்த அதிகாரிகளும் வேலை செய்யவில்லை. அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டது. அமைச்சரவை பதவியை ஏற்ற பின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது நதிநீர் இணைப்புத் திட்டபணி. நான் ஆரம்பித்ததை நானே திறக்கவேண்டும் என விட்டு விட்டார்கள் போல. அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளது. 3ம் பகுதி 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. 4ம் பகுதி 58% பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் முழுமையாக மார்ச் 2023ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். தொடர்ந்து நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து பேசிய அவர், அந்த சம்பவம் அனுதாபத்திற்குரியது, மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனால் அதன் விளைவு அனைத்து குவாரிகளும் மூடப்பட்டது. ஒரு குவாரி மூடுவதற்கு அனைத்து குவாரியையும் மூடியது தவறு. ஏனென்றால் ஒரு குவாரிக்கு பின்னர் ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குவாரிகாரர்கள் என்னை பார்க்கவில்லை. அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.