நெல்லை: மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும் - அதிமுகவினர் ஆணையரிடம் மனு
அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கேலரி இடிந்து விழுந்த விபத்து நடைபெற்றிருக்கலாம், அதுகுறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
நெல்லையில் 14.95 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட கேலரியின் மேற்கூரை 7 மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் சாய்ந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக பலர் சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தியை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆணையர் அலுவலகத்திற்குள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நேற்று அரை மணி நேரம் பெய்த மழையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம். மேலும் இந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்ட பிற பணிகளையும் ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை ஆராய வேண்டும் என்று கூறியுள்ளோம். ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தான் இந்த மைதானம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு திமுக ஆட்சியில் தான் முழுமையான பணிகள் நடைபெற்றது. எனவே அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இது விபத்து நடைபெற்றிருக்கலாம், அதுகுறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்