பாளை மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டு பறிமுதல் - சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நூறாண்டுகள் பழமை வாய்ந்த மத்திய சிறைச்சாலை நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த மத்திய சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, கடத்தல், வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள், அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்குள்ள கைதிகளின் நன்னடத்தைகள் குறித்து மாதந்தோறும் சிறை காவலர்கள் ஆய்வு செய்தும் வருகின்றனர். அந்த வகையில் சிறை அலுவலர் வினோத் இன்று கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் என்பவரது அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்த நிலையில் அதனை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து சிறை நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது காவல்துறையினர் பிரம்மா செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சிறைகளில் சில காவலர்களின் உதவியோடு கைதிகளுக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதேபோல் கைதிகள் சிறையில் இருந்தபடியே செல்போன் உள்பட சகல வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறைத்துறை டிஐஜி பழனி கடந்த 1ம் தேதி பாளையங்கோட்டை சிறையில் ஆய்வும் மேற்கண்டோர். டிஐஜி ஆய்வு மேற்கொண்ட சில நாட்களிலேயே கைதியின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்