நெல்லை: மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1500 வழக்குகள் முடித்து வைப்பு - நீதிபதி குமரகுரு
”காசோலை வழக்குகள் உள்பட எல்லா வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” - நீதிபதி குமரகுரு
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்கும் வகையிலும் தேசிய சட்டப்பணிகள் மூலம் ஆண்டுதோறும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படும் வழக்குகளுக்கு உடனடி தீர்வுகளும் காணப்படும். அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லை உட்பட 9 தாலுகாவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 25 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குமரகுரு தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட நீதிபதி குமரகுரு அளித்த பேட்டியில், காசோலை வழக்குகள் உள்பட எல்லா வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் வழக்குகள் முடித்து வைக்கப்படுவதால் இதில் யார் வெற்றி பெற்றார், யார் தோல்வி பெற்றார் என்பது இல்லை. பொதுமக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த வழக்கை மக்கள் நீதிமன்றத்தில் முடித்தால் நீதிமன்ற கட்டணம் முழுமையாக அவர்களுக்கு சென்றடையும்.
மேலும் மக்கள் நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் இதன் நோக்கம் என்னவென்றால் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை குறைத்து லோக் அதாலத் மூலம் உடனுக்குடன் தீர்வு காண்பது தான். எனவே இதனை பொதுமக்கள், பயனாளிகள் என அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வழக்குகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற வழக்குகளில் மொத்தம் சுமார் 6000 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் சுமார் 1500 வழக்குகளுக்கு உடனடி சமரச தீர்வு வழங்கப்பட்டது. இதுதவிர பெட்டி கேஸ் போன்ற வழக்குகளும் முடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் ஜெயில் அதாலத் என்று சொல்லக்கூடிய ஜாமீன் பெற முடியாத சிறு சிறு வழக்குகளுக்கும் சிறையில் இருப்பவர்களுக்கும் அட்மிசன் போட்டு முடிக்கப்படுகிறது. இது போன்று அனைத்து விதமான வழக்குகளும் சட்டப்பணி ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கை மேம்பட மக்கள் நீதிமன்றம் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்