(Source: ECI/ABP News/ABP Majha)
Nellai: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்..! வெளிநடப்பு..!
ஆளும் கட்சித் தலைவருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 3 பேரும் அதிமுகவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வெளி நடப்பு செய்தனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டு உள்ளது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் என 18 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் உள்ளனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் தலைவராக செல்வசுரேஷ் பெருமாள் என்பவர் உள்ளார். இந்த நிலையில் இன்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை கூட்ட அரங்கிற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து நகராட்சி தலைவர் அரசு நிதியை வேண்டுமென்றே வீணடிப்பதாக கூறி விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் துணைத்தலைவர் திலகா குற்றம் சாட்டினார். அதோடு விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மின்சாரம் இல்லை என்றால் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களை முறையாக பயன்படுத்தாமல் அரசு நிதியை வீண் விரையம் செய்கின்றனர், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நற்பெயரை கெடுக்கும் வகையில் தலைவர் செயல்படுவதாகவும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 1 வது வார்டு எதிர்கட்சி என்பதால் பொதுமக்களை வேண்டுமென்றே பழி வாங்குவதற்காக அடிப்படை தேவைகளான சாலை மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக செய்து தரவில்லை என 1வது வார்டு உறுப்பினர் இமாகுளேட் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் நகராட்சி தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு தங்கள் வார்டுகளிலும் மக்களுக்கான அடிப்படை பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை என்று கூறி திமுக கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சித் தலைவருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 3 பேரும் அதிமுகவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து 1 வது வார்டு அதிமுக உறுப்பினர் இமாகுளேட் கூறும் பொழுது, தொடர்ந்து எதிர்கட்சி என்பதால் எங்களது வார்டுகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக கையில் வைத்திருக்கும் புகைப்படமே சாட்சி. ரோடுகளின் நிலைமை இதே போன்று மிகவும் மோசமாக உள்ளது. பொது நிதியை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். வேறு எந்த வசதிகளும் நாங்கள் கேட்கவில்லை, மக்கள் எளிதாக நகராட்சியை அணுக முடியவில்லை. நாய் தொல்லைகள் தாங்க முடியவில்லை, அதனை பிடிக்க மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பிடிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியும் சேர்ந்து போராட்டம் செய்கிறார்கள் என்றால் நிர்வாகம் துருபிடித்து போய் உள்ளது என்றார்.
18 வது வார்டு திமுக உறுப்பினர் கூறும் பொழுது, விகேபுரம் நகராட்சியில் நீரேற்றும் தொட்டிகள் பல உள்ளது. மின்சாரம் தடைபட்டால் எந்த தடையுமின்றி குடிநீர் வழங்க 5 ஜெனரேட்டர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தும் பல முறை போராடியும் அந்த ஜெனரேட்டர்கள் வேலை செய்யவில்லை. 7, 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் பொதுமக்களுக்கு பயனின்றி வீணாக இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் துணைத்தலைவர் உட்பட அதிமுக கவுன்சிலர்களுடன் ஆதரவு தெரிவித்து இன்று வெளி நடப்பு செய்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை தலைவர்களுக்கு கடிதமாக அனுப்பியுள்ளோம். எனவே ஜெனரேட்டர்களை விரைவில் சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.