ஆற்றில் போடுவதும் ஆட்சியரிடம் கொடுப்பதும் ஒன்று தான்; நெல்லையில் திமுக கவுன்சிலர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
நாங்கள் கொடுக்கும் மனுவுக்கு எந்த வித நடவடிக்கையும் இல்லை, அதிகாரிகள் அதனை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க பலர் வந்தனர். ஆனால் ஆட்சியர் அங்கு இல்லாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர், மனக்காவளம்பிள்ளை நகர், நடுக்கமுடையார்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக மாநகராட்சி கவுன்சிலர்கள் பவுல்ராஜ் , இந்திராணி மற்றும் திமுக நிர்வாகிகள் தலைமையில் வருகை தந்தனர். அப்போது ஆட்சியர் இல்லாத நிலையில் தங்களது குறைகள் தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுக்காமல், பலமுறை தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.
குறிப்பாக மனக்காவலம்பிள்ளை நகர் அருகே சாலையை இருபுறம் பிரிப்பதற்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. சாலையை கடக்கும் பொழுது தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. வாகனங்கள் வேகமாக வருவதை தடுக்கும் விதமாக வேகத்தடை அமைக்கவும், பேரிகாடுகள் அமைத்து வேகத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.. தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த மனுவை ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் கொண்டு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கூறும் பொழுது, "ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்களது குறைகளை கண்டு கொள்வதில்லை, சாலை விபத்து குறித்து 2021 லிருந்து மனு அளித்து வருகிறோம், 3 பேர் அதில் உயிரிழந்தும் உள்ளனர், இருப்பினும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை இல்லை, அதே போல் மக்கள் பாதிப்படையும் வகையில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, இப்படி பல கோரிக்கைகளை வைத்தும் மக்களது குறைகளை கண்டு கொள்வதில்லை, நாங்கள் கொடுக்கும் மனுவுக்கு எந்த வித நடவடிக்கையும் இல்லை, அதிகாரிகள் அதனை குப்பை தொட்டியில் போட்டு விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் தான் இந்த போராட்டம் நடத்தினோம், இனியும் நடவடிக்கை இல்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து மூதாட்டி ஒருவர் கூறும் பொழுது, "மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு மனுக்களை வாங்குவது இல்லை. மனு அளிக்க வரும் பொழுது ஏமாற்றத்துடன் தான் திரும்ப செல்கிறோம், அவருக்கு மாற்றாக மனுக்களை வாங்கும் அதிகாரியிடம் மனு அளித்தால் அதன் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கும் மனுவும், ஆற்றில் போட்ட மனுவும் ஒன்றுதான்" என்று தெரிவித்தார்.
கோரிக்கை தொடர்பான மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக்கூறி திமுக கவுன்சிலர்களுடன் வந்த பொதுமக்கள் தங்களது மனுவை தாமிரபரணி ஆற்றில் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது