Nellai Kannan : காற்றில் கலந்தது தமிழ் கடலின் மூச்சு - நெல்லை கண்ணன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தொல் திருமாவளவன்
”தமிழை பேசுவதற்கும், நேசிப்பதற்கும் தமிழகத்தில் ஆளில்லை என்ற அளவிற்கு நெல்லை கண்ணனுக்கு நிகர் அவரே என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய இலக்கிய சொற்பொழிவாளராக இருந்தார் - திருமாவளவன்”
தமிழ் இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மீக அரசியல் சொற்பொழிவாளர், தமிழ் கடல் என அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் 18.08.22 வியாழக்கிழமை மதியம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் அரசியல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாம் நாளான இன்று காலை முதலே பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் இல்லத்திற்கு வந்து நேரில் அஞ்சல் செலுத்தி வருகிறார்கள். அதன்படி நக்கீரன் ஆசிரியர் கோபால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ராஜா அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் நெல்லை கண்ணன் இல்லத்திற்கு நேரில் வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில் நேற்று அதன் பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தி பேசி இருந்த நிலையில் இன்று அவர் கட்சி சேர்ந்த ராஜேந்திரன், நிஜாம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி ராமசுப்பு, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் அவரது உடலுக்கு கட்சி கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அஞ்சலி செலுத்திய தமிழச்சி தங்கபாண்டியன் கூறும் பொழுது, ஒரு மிகப்பெரிய இளைய தலைமுறைக்கு ஊக்கமான உந்து சக்தியாக திகழ்ந்த ஐயா அவர்கள் பட்டிமன்ற பேச்சுகளை அறிவுசார்ந்த களமாக, நகைச்சுவை உணர்வாக கொண்டு சேர்ப்பதில் வல்லவர். எண்ணிடலங்கா பேச்சுக்கள், அரசியல் மேடை, மேடை அரங்கேற்றம் என்று தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தவர், இவர் இயங்குவதை நிறுத்திக் கொள்வாரா என்பதை என்னால் இந்த கணம் வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இலக்கிய உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. இதனை கடந்து செல்லும் மனோ திடத்தை அவரது குடும்பத்தார்க்கு இயற்கை தர வேண்டும் என தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
தொடர்ந்து தொல் திருமாவளவன் கூறும் பொழுது, தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஐயா மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிருபானந்த வாரியாருக்கு பிறகு தமிழ் கடல் என்று தமிழ் சமூகத்தால் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டவர் நெல்லை கண்ணன். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என இலக்கியங்களை அருவி போல் கொட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்து மேடைகளில் சொற் சிலம்பம் ஆடக்கூடியவர், அந்த அளவிற்கு இலக்கிய ஞானம் படைத்தவராக விளங்கினார். அவரை போல் தமிழை பேசுவதற்கும், நேசிப்பதற்கும் தமிழகத்தில் ஆளில்லை என்ற அளவிற்கு அவருக்கு நிகர் அவரே என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய இலக்கிய சொற்பொழிவாளராக இருந்தார். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு இலக்கிய தளத்திற்கு நேர்ந்த ஒரு பேரிழப்பாகும் என்று தனது இரங்கலை தெரிவித்தார்.
தொடர்ந்து நெல்லை கண்ணனின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். மயான ஊர்தியில் புறப்பட்ட நெல்லை கண்ணனின் உடல் டவுண் அருணகிரி தியேட்டர் வழியாக கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை அருகே உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு அவரது உடல் அங்குள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. நெல்லை கண்ணனின் இந்த மறைவு தமிழ் சமூகத்திற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகவே கருதப்படுகிறது.