பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் சாப்பாட்டில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி - திருநெல்வேலி செல்லும் சாலையில் இயங்கி வருகிறது சாய் & சாய் தனியார் உணவகம். எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என உள்ளது. இந்த நிலையில் இந்த சாலை அருகே தனியார் வங்கி ஒன்று செயல்படுகிறது.
பொங்கலில் முழு நீள பல்லி:
இந்த வங்கியில் தற்காலிக ஊழியராக சதீஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை அருகே உள்ள தனியார் உணவகத்தில் பொங்கல் பார்சல் ஒன்றை வாங்கி கொண்டு வங்கிக்கு வந்துள்ளார். பின்னர் வங்கியில் அமர்ந்து சாப்பிடவதற்காக பார்சலை திறந்த பொழுது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது,
அந்த உணவில் முழு நீள பல்லி ஒன்று இறந்த நிலையில் உணவிற்குள் புதைந்து இருந்துள்ளது. இதனை கண்ட வங்கி ஊழியர் உடனடியாக அதனை கையோடு எடுத்துக்கொண்டு வங்கிக்கு எதிரே இருந்த சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பல்லி கிடந்த உணவை காண்பித்து புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், தாசில்தார் வின்சென்ட் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரநாராயணன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் விரைந்து சென்ற அவர்கள் அந்த கடையில் இருந்த உணவு பொருட்கள் மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வினை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு:
குறிப்பாக உணவகத்தின் சமையலறை மற்றும் சமையல் பொருட்கள் வைத்திருக்கும் அறைகள் அனைத்தையும் பார்வையிட்ட பொழுது சமையலறை முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும் உடனடியாக கடையை மூடி இரண்டு தினங்களில் கடையை சீரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து கடையை முழுமையாக சீரமைப்பு செய்துவிட்டு தங்களிடம் தகவல் கூற வேண்டும்.
கடையை ஆய்வு செய்து அதன் பின் அனுமதி கொடுத்த பிறகே கடையை திறக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரநாராயணன் பொங்கலில் பல்லி விழுந்தது உண்மை என்பதை உறுதி செய்ததன் பேரில் உணவகத்திற்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.