![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஜெயக்குமார் மரணம்: சபாநாயகரின் ஆதாரவாளரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை..! நடப்பது என்ன?
ஜெயக்குமார் மரணமடைந்து 3 மாதங்களை நிறைவடைந்த நிலையில் சிபிசிஐடி வழக்கு மந்தகதியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகவே காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
![ஜெயக்குமார் மரணம்: சபாநாயகரின் ஆதாரவாளரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை..! நடப்பது என்ன? Nellai Congress leader Jayakumar death CBCID interrogates Speaker supporter - TNN ஜெயக்குமார் மரணம்: சபாநாயகரின் ஆதாரவாளரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை..! நடப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/446c9ce8a600f1f9566eda96fbaf7cf81721983769074571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜெயக்குமார் மரணமும்- சிபிசிஐடி விசாரணையும்:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில் மரணத்திற்கு முன்பாக ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிட்டவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏ.டி.ஜி.பி வெங்கடராமன், ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் நெல்லையில் முகாமிட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய நபர்களை நெல்லை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தினர். மேலும் அவரது மகன்கள், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமும் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றது. அதேபோல கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடயவியல் அதிகாரிகள், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்யும் டம்ப் டவர் கருவி, உள்பட பல்வேறு வகைகளில் விஞ்ஞானபூர்வமாக தடயங்களை தேடி ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தொடர்ந்து அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என முப்பதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைகளில் நீண்ட கம்புகளை கொண்டு குப்பைகள், செடிகள் போன்ற பல்வேறு இடங்களில் கிளரி ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு செய்தனர்..
சபாநாயகருக்கு நெருக்கமான நபரிடம் விசாரணை:
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்க்கு மிகவும் நெருக்கமான மற்றும் ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்குமூலம் கடிதத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பெயர் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் முதல் நபராக இடம் பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜாவை சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். ஏற்கனவே வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்தராஜா தனது விளக்கத்தை கடிதமாக அளித்துள்ளார்.. அந்த கடிதத்தின் அடிப்படையில் மீண்டும் ஆனத்தராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் எழுதியாக வெளியான கடிதம் ஜோசப் பெல்சி மூலம் வெளியானதாக அவர் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே தற்போது ஜோசப் பெல்சியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகன்கள் மூலமே கிடைத்தது:
இதனிடையே ஜோசப் பெல்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயக்குமாரின் மகன்கள் மூலமே காவல்துறைக்கு கடிதம் கிடைத்துள்ளது. அதன் பின்னரே சமூக வலைதலங்களில் பரவிய செய்தியாக எனக்கும் கிடைத்தது. என் மூலம் அந்த கடிதம் பரப்பப்படவில்லை என்று விளக்கம் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரது விளக்கங்களையும் பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர், ஜெயக்குமார் மரணமடைந்து 3 மாதங்களை நிறைவடைந்த நிலையில் தற்போது வரை விசாரணை மட்டுமே சென்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பான எந்த ஒரு தகவலும் தற்போது வரை சிபிசிஐடி போலீசார் வெளியிடாத நிலையில் இந்த வழக்கு மந்தகதியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாகவே காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வழக்கு எப்போது முடிவிற்கு வரும்? அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதையும் விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)