ABP நாடு செய்தி எதிரொலி :
நெல்லை, குமரி மாவட்ட எல்லையில் கடத்தப்படும் கனிம வளங்களை தடுக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தபட்டது. அதில், சோதனைச்சாவடியில் அனைத்து கனரக வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் , நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்ட விரோதமாக இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடித்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குமரி மாவட்ட கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் கேரள கும்பல்களால் பாரம்பரிய மலைத்தொடர் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் வறட்சியும், வன உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இது குறித்து நமது ABP நாடு கடந்த ஜூலை 31 அன்று விரிவான செய்தியை வெளியிட்டது , இதன் எதிரொலியாக தற்போது மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
யுனெஸ்கோவால் பாரம்பரிய மலைத்தொடர் என அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை சுமார் 62,000 சதுர மைல் பரப்பளவு கொண்டது. குமரி முதல் மகாராஷ்டிரா வரை நீண்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோதாவரி , காவேரி, கிருஷ்ணா, தாமிரபரணி, துங்கபத்திரா போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பத்திற்கும் மேற்பட்ட அணைகளும், 15க்கு மேற்பட்ட பெரிய நீர் வீழ்ச்சிகளும், 38க்கு மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட அரசு வன உயிரின பூங்காக்களும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சுமார் 1600 கிமீ நீளம் கொண்ட மலைத் தொடரால் மகாராஷ்டிரா , கோவா , கர்நாடகா , கேரளா , தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் மழை வளம் பெறுகின்றன. இதில் குமரி மாவட்டத்தில் இயற்கையை சிதைத்து அழிக்கும் விதமாக சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டதால் தமிழக அரசு மலை பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு 2003ல் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் மலைப் பகுதி பாதுகாப்பு ஆணைய அனுமதி இன்றி பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு , கோழிப்பண்ணை , பன்றி பண்ணை அமைக்கவோ, நிலத்தில் எதேனும் மாறுதல் செய்ய வேண்டும் என்றாலோ 300 சதுர மீட்டருக்கும் மேல் கட்டடம் கட்ட வேண்டும் என்றாலோ மலை பகுதி பாதுகாப்பு ஆணைய குழுமத்தின் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணைக்கு விரோதமாக தடை செய்யப்பட்டுள்ள மலை பகுதிகளில் கல் குவாரிகள் என்ற பெயரில் பாறை மணல் (எம்சேண்ட்) தயாரித்தும், அதிக சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்களை பயன்படுத்தி மலைகளை தகர்த்தும் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்ட மலை பகுதிகளில் 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டிடங்கள் கட்ட சட்ட விரோதமாக அனுமதி வழங்கபட்டுள்ளது. கனிமவளங்கள் கடத்தல் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் குமரியில் இருந்து கேரளாவிற்கு பெருமளவு கனிம வளங்கள் கடத்தி செல்வதும் தினமும் தொடர் கதையாக உள்ளது.
அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தேரூர், குலசேகரபுரம் உட்பட 5 கிராமங்களும், தோவாளை தாலுகாவில் அழகியபாண்டிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், அருமநல்லூர் உட்பட்ட 10 கிராமங்கள், விளவங்கோடு தாலுகாவில் மாங்கோடு , களியல் , அருமனை , நட்டாலம் , வெள்ளாங்கோடு உட்பட 11 கிராமங்கள் , கல்குளம் தாலுகாவில் வேளி மலை, பொன்மனை , சுருளக்கோடு ,வில்லுக்குறி , திற்பரப்பு உட்பட்ட 10 கிராமங்களில் உள்ள மலை பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்கபட்டுள்ளன. இங்கு மலைகளை உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இடங்களில் போலி ஆவணங்களை தயார் செய்து, அரசு அதிகாரிகளை ஏமாற்றியும், சில அதிகாரிகள் துணையோடும் கேரளாவை சேர்ந்த கனிம வள கடத்தல் கும்பல்கள் கனிம வளங்களை திருடி கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். லஞ்சம் விளையாடுவதும், சில அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதும் இந்த கடத்தலை உரம் போட்டு வளர்ப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
கனிம வளத்துறையும், வருவாய் துறையும் கடத்தல் கும்பல்களுக்கு துணை போனதால் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட மலைப்பகுதி என்று அறிவித்த இடங்களிலும் சட்டத்திற்கு முரணாக பாறைகளை உடைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது .
அரசின் அனைத்து துறைகளும் அரசாணையை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதின் விளைவாக குமரியில் வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டதோடு, மழை வளமும் குறைய தொடங்கியுள்ளது. எல்லா கால நிலையிலும் குளுகுளுவென இருக்கும் குமரி மாவட்டம் இதனால் வறட்சியை அனுபவிக்க தொடங்கியுள்ளது.