படிப்பு சான்றிதழ் கேட்டு சகோதரர்கள் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு
பூதத்தான் அவரது தம்பி சண்முகா ஆகிய இரண்டு பேரும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மேலே ஏறி நீதி வேண்டி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
![படிப்பு சான்றிதழ் கேட்டு சகோதரர்கள் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு Nellai: brothers tried commit suicide by climbing on top of the district primary education office after asking for the study certificate TNN படிப்பு சான்றிதழ் கேட்டு சகோதரர்கள் தற்கொலை முயற்சி - நெல்லையில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/205f8645a00cbd6b73aedc031da5c3801660659201515109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவருக்கு பூதத்தான் மற்றும் சண்முகா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் உள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் எட்டாம் வகுப்பு பயின்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்ற நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோன்று கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பள்ளியில் பயின்ற பூதத்தான் என்ற மாணவர் மட்டும் தேர்வில் தோல்வியடைந்ததாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழ்நாடு அரசு அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்த நிலையில் தனது மகன் மட்டும் எப்படி தோல்வி என்று அறிவிக்கப்பட்டார் என்று பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அதற்கு எந்த விதமான முறையான பதிலையும் பள்ளி நிர்வாகம் கொடுக்காத நிலையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர், காவல்துறை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை என பல்வேறு துறைகளிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் இதுவரை உரிய பதில் கிடைக்காத நிலையில் நேற்று பூவலிங்கம் அவருடைய மகன்களுடன் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது பூதத்தான் அவரது தம்பி சண்முகா ஆகிய இரண்டு பேரும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மேலே ஏறி நீதி வேண்டி திடீரென தற்கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முதலில் வந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதற்கு எந்தவிதமான முடிவும் எட்டப்படாத நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு வருகை தந்து இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டன. எனினும் அவர்கள் அதற்கு உடன்படாத நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மாணவர்களது பள்ளிக் கல்வி இடைச் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் whatsapp செயலி மூலம் அனுப்பியதை தொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு மேலிருந்து கீழ் இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் தாசில்தார் அலுவலக கட்டிட மாடியிலும், நீர்த்தேக்க தொட்டி மேலே நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)