கடைக்குள் புகுந்த பாம்பு .....அலறி அடித்து ஓடிய மக்கள்... நெல்லையில் பரபரப்பு
சுமார் 2 அடி நீளத்தில் கருமை நிறத்தில் இருந்த பாம்பை பார்த்த கடை உரிமையாளர் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருக்கும் அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வருவோர், தங்களது பிரச்னைகள் குறைகளுக்கு தீர்வு காண மனு அளிக்க வருவோர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லக்கூடிய பகுதி என்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். அதே போல ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதோடு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சென்று உணவு அருந்தும் வகையில் தேநீர் அருந்தும் வகையிலும் அலுவலகத்தின் பின்புறத்தில் தனியார் கடைகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இன்று வழக்கம் போல் அந்த கடைகள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு முருகன் என்பவருக்கு சொந்தமான டீக்கடைக்கு டீ அருந்த சிலர் சென்று உள்ளனர். கடையின் உள்ளே அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தவர்கள் திடீரென அலறி அடித்தப்படி வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது அவர்கள் கடையின் உள்ளே சுவற்றையொட்டி கருமையான பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. சுமார் 2 அடி நீளத்தில் கருமை நிறத்தில் இருந்த பாம்பை பார்த்த கடை உரிமையாளர் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் பாளையங்கோட்டை நிலைய அலுவலர் ராஜா ( பொறுப்பு ) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடைக்குள் தஞ்சம் புகுந்திருந்த பாம்பை மிக லாவகமாக பிடித்து சாக்குப் பையில் போட்டு கொண்டு சென்றனர். பிடிபட்ட பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு விட இருப்பதாகவும் தெரிவித்தனர். பாம்பு பிடிக்கப்பட்டதை அடுத்து பதட்டத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பயம் நீங்கி தேநீர் அருந்தி சென்றனர். கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்