நெல்லையில் தொடரும் 3.0 கஞ்சா வேட்டை - ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படும் புகையிலை பொருட்கள்
சோதனையில் மினி லாரியில் சுமார் 21 கிலோ எடையுள்ள 5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.
தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங், தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை போலீசார் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மினி லாரியில் சுமார் 21 கிலோ எடையுள்ள 5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.
பின்னர் கஞ்சாவை கடத்தி வந்த மானூர், மருதப்பபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து(34), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன்(38) என்பவரை போலீசார் கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து, டவுணை சேர்ந்த சிவா மற்றும் மடத்தான் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல நெல்லை மாவட்டம் வள்ளியூர் DSP யோகேஷ்குமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் வள்ளியூர் ஏர்வாடி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் நாங்குநேரி அருகேயுள்ள கலுங்கடியை சேர்ந்த லென்ஸ்குமார் மற்றும் ஏர்வாடியை சேர்ந்த அய்யாபிச்சை என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் சபாபதி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ரஸ்தா அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரஸ்தாவில் உள்ள பேச்சிமுத்து (40), என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவரது கடை அருகே கையில் பையுடன் நின்ற இராமையன்பட்டியை சேர்ந்த வடகரையான்(45) என்பவரை சோதனை செய்ததில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.