நாங்குநேரி சம்பவம்: சிறுவனுக்கு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான வேலை வாய்ப்பு அரசு சார்பில் வழங்க பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் இருவரை வீட்டிற்குள் புகுந்து சக மாணவர்கள் சரமாரியாக வெட்டி படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் படுகாயமடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவர்களிடம் மாணவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். செய்யப்பட கூடிய சிகிச்சைகள் தேவையான நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவரிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனுக்குடன் வழங்குவதற்கு ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியம். “நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு வந்தவுடன் மாணவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கவும் மருத்துவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை தொடர்பாக நேரடியாக அறிந்து கொண்டு தேவையான சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தியதுடன் அப்பகுதியில் நியாய விலை கடையையும் திறந்து வைத்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இங்கேயே அவர்கள் தங்கி இருந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் கையை புதிதாக மாற்றும் நவீன சிகிச்சை அளிக்கும் வல்லுனர்கள் உள்ளனர்.
இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான வேலை வாய்ப்பு அரசு சார்பில் வழங்க பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு தற்போது அவர்களுக்கு வேலைக்கு செல்லும் வயது இல்லை என்பதனால் தமிழக முதலமைச்சரின் உத்தரவை பெற்று அவர்கள் வேலைக்கு செல்லும் வயது வந்தவுடன் மக்கள் நல்வாழ்வுத்துறையிலேயே வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இருவரும் குணமடைந்த பின்னர் அவர்களுக்கு தேவையான கல்வி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படும். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வெறிநாய் கடி தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் நோயாளிகள் தினம் தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஒரு நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறைபாடு இருப்பதாக கருதி ஒட்டுமொத்த அரச மருத்துவமனையில் செய்யும் மருத்துவத்தையும் குறை கூற முடியாது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.