சென்னை பள்ளியில் ஆன்மீக வகுப்பு நடத்தி சனாதான கருத்துக்களை போதித்த சம்பவம் - துரை வைகோ கண்டனம்
தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
முதல்வரின் அமெரிக்க பயணமும், தொழில் முதலீடுகளும்:
நெல்லை தாழையூத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி ஆறுமுக பாண்டியன், திமுக நிர்வாகி செல்வகருணாநிதி இல்ல விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் மணிகண்ட பூபதி - சுந்தரி ஆகியோரை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆன்மீக வகுப்பு தவறானது. பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி நடத்த யாரால் அனுமதிக்கப்பட்டது.எதனால் நடந்தது என்ற விசாரணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்டு சனாதன கருத்துக்களை அனுமதித்த நபர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பார். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கோடிக்கணக்கான முதலீடுகளை கொண்டு வந்தார். பின்னர் சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு 10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கொண்டு வரப்பட்டது. அதில் முப்பது சதவீதத்திற்கு மேல் தற்போது அந்த நிறுவனங்கள் பணியை தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள முதன்மை நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேர நிர்பந்தம்:
அமெரிக்காவைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனம் 2000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொண்டு வரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் பயணம் மேற்கொண்டு தொழில்நுட்ப ரீதியிலான தொழிற்சாலைகள் பார்வையிட்டார். இந்த தொழில்நுட்ப தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரும் நிலையில் பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. தேசிய கல்விக் கொள்கை சார்ந்தது தான் பிஎம் ஸ்ரீ திட்டமும். பாஜகவை தவிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களும் தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை என்ற நிலையோடு இருந்து வருகிறது. பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். பி எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. அதில் பல முரண்பாடுகள் உள்ளது.
நிதி நெருக்கடியில் தமிழக அரசு:
மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதாக மத்திய அரசு சொல்கிறது. மூன்று மொழி கற்றுக் கொள்வதில் என்ன தவறு என மத்திய அரசு கேட்பதை நாங்கள் ஆமோதிக்கிறோம். மூன்றாவது மொழி ஏன் ஹிந்தியாக சமஸ்கிருதமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம். இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என சொல்கிறோம். அதற்கு தேவை வெளிநாட்டு மொழியே தவிர இந்திய மொழி அல்ல. வேறு வழியில்லாமல் ஹிந்தியை கற்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை தேசிய கல்விக் கொள்கை உருவாக்குகிறது. தமிழகத்தில் 15,000 ஆசிரியருக்கு மேல் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு 249 கோடி வரவேண்டிய நிதி வரவில்லை. இந்த ஆண்டுக்கான நிதி 500 கோடிக்கு மேல் வரவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே நிதி நெருக்கடி உள்ளது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் பள்ளிக்கல்வித்துறையில் ஜி ஆர் ரேசியோ 51% என மத்திய அரசு 2050 ஆம் ஆண்டில் இலக்கு வைத்துள்ள சூழலில் தற்போதைய நிலையில் அந்த சதவீதத்தை நாம் தாண்டி விட்டோம். மாநில பாடத்திட்டமும் மத்திய பாடத்திட்டத்திற்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மாநில பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் பல மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளது.
எங்கள் கூட்டணி நிலைத்து நிற்கும்:
வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை போன்ற வட மாவட்டங்கள் தான் அதிக பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. சென்னை பகுதியில் வடிகால் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அதனை துரிதப்படுத்த வேண்டும் என அரசு சொல்லியுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளச் சேதாரங்களை போல் சென்னையில் ஏற்படக்கூடாது என அதிகாரிகளும் அரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. பருவ மழைக்கு தயாராக வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. எங்களது கூட்டணி நிலைத்து நிற்கும் எங்களது கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்தார்.