தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
”தமிழக முதலமைச்சரின் 110 விதியின் கீழான அறிவிப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அவையில் அமர்ந்து பேச நினைக்கவில்லை”
நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”சட்டப்பேரவையை நடத்த விடாமல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரினார்கள். கேள்வி நேரம் முடிந்த பின்னர் தான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிந்தும் அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் ஒத்தி வைக்க கோரினார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு அதிமுக அதில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதில் கலந்து கொள்ளவில்லை. தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் எதிர்க்கட்சிகளுக்கே வழங்கப்படுகிறது.
சபை நடக்கும் நேரத்தில் 60% எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. கேள்வி நேரம் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு கொண்டிருக்கிறோம். தமிழக முதலமைச்சரின் 110 விதியின் கீழான அறிவிப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் அவையில் அமர்ந்து பேச நினைக்கவில்லை. பெற்றோர்களால் நடத்தி முடிக்கப்படும் திருமணங்கள் கூட அனைவருக்கும் மன ஒத்துப் போகும் நிலை உருவாவதில்லை. மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம். அதனை சாதிய மோதலாக பார்க்க கூடாது” என்றார்.
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் பதினோரு இடங்களில் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாராளுமன்ற சபாநாயகர் செய்தது சரியா என்பது தொடர்பான கேள்விக்கு, எனக்கு ஹிந்தி தெரியாது. அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அதனால் அவை குறிப்பில் இருந்து நீக்கியது சரி, தவறு என்பது குறித்து விமர்சனம் செய்ய முடியாது.
மாஞ்சோலை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக அரசு வெளிப்படையான கருத்தை எதுவும் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் தங்களது தரப்பு கருத்தை அரசு முறையாக தெரிவிக்கும். 2018 ஆம் ஆண்டு மாஞ்சோலை இருக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது என தமிழக அரசு எழுதிக் கொடுத்தபோது யாரும் அது குறித்து வாய் திறக்கவில்லை என தெரிவித்தார்.