Minister Udayanidhi Stalin: ”வேகமாக முன்னேறும் நகரங்களில் திருநெல்வேலியையும் கொண்டுவர முயற்சி”.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
பல்வேறு நிதிநெருக்கடி சூழலிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது, இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா பேரூரையாற்றும் பொழுது, ”கலைஞருக்கும், முதல்வருக்கும் பிடித்த ஊரில் திருநெல்வேலியும் ஒன்று. நெல்லையில் நீர் பாசனத்திற்கு அணையை கட்டி விவசாயத்தை ஊக்குவித்தவர் கலைஞர். அப்படிப்பட்ட நெல்லையை இன்றைக்கு நவீனமயமாக்கி தமிழ்நாட்டின் முக்கியமான மாநகரமாக வளர்த்தெடுத்து வருகிறார் முதல்வர். அதன் வெளிப்பாடாக தான் இன்று 572 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைக்கின்றோம். இந்த திட்டங்களில் நெல்லையின் முக்கிய அடையாளமான பெரியார் பேருந்து நிலையத்தை சீரமைத்து மேம்படுத்தும் பணிகள் 85 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றன. அதனை இன்று திறந்து வைத்துள்ளோம். திமுக ஆட்சிக்கு அமைந்தது முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியை கண்டது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் கிராமப்புறங்களில் உள்ள வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் டார்லிங் நகரில் 6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி செய்வதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம், நெல்லையில் இருந்து இன்னும் நிறைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உருவாகி வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதே போல இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வணிக வளாக கட்டிடத்தை 24 கோடி மதிப்பீட்டில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே இரண்டு நிலைகளாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. மல்டி லெவல் பார்க்கிங் பெசிலிட்டி 13 கோடி மதிப்பீட்டில் கட்டி இன்று திறந்து வைத்துள்ளோம். மக்கள் வசதிக்காக பாளை பேருந்து நிலையம் அருகே நகரின் மையப்பகுதியில் இந்த கட்டிடடங்கள் கட்டப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள வர்த்தகர்கள், தொழில்முனைவோர்கள் தங்கள் கூட்டங்களை நடத்த போதிய இடம் இல்லாத காரணத்தால் மாநகராட்சியின் வர்த்தக மையம் அருகிலேயே புதிய தொழில் முனைவோர் கூட்ட அரங்கை ரூபாய் 3 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறந்து வைத்துள்ளோம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் தாமிரபரணி நீரை ஆதாரமாக கொண்டு 12 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மிக முக்கிய திட்டமாக களக்காடு நகராட்சி மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட 7 பேரூராட்சி குடிநீர் தேவையை தீர்க்க ரூபாய் 436 கோடி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அது தவிர ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, உழவர் நலத்துறை சார்பாக புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழநாட்டின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை ஒரே சீராக இந்த அரசு செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளை விட நெல்லையின் வளர்ச்சி கடந்த இரண்டரை ஆண்டுகளில் பன்மடங்காக உயர்ந்திருப்பதை நீங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை என்பதை உணர்ந்த இயக்கம் திமுக இயக்கம், அதன்படி ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தி வருகிறது.
மக்களுடன் மக்களாக கழமும், கழக அரசும் என்றும் இணைந்தே இருக்கும். கடந்த ஆண்டு பெய்த மிகப்பெரிய வரலாறு காணாத மழை நெல்லையையே புரட்டி போட்டது. அரசுக்கு தோலோடு தோல் சேர்க்கும் விதமாக நெல்லை மக்கள் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினர், இன்று திறக்கப்பட்ட பேருந்து நிலையமும் மழை வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அந்த வெள்ளத்தை இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர், திருநெல்வேலி நெல் விளையும் பூமியாக மட்டும் இருக்கக்கூடாது. சொல் விளையும் பூமியாக வேண்டும் என்று 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார். வேகமாக முன்னேறும் நகரங்களின் பட்டியலில் திருநெல்வேலியையும் கொண்டு வர அரசு அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறது. பல்வேறு நிதி நெருக்கடி சூழலிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக நமது தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளோம், ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு திருப்பி தந்திருப்பது வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி தந்துள்ளது. வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு 1 ரூபாய் கூட தராத சூழலிலும் முதல்வர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் கொடுத்துள்ளார். நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் தேவையான ஒவ்வொன்றையும் தொலை நோக்கு பார்வையுடன், சிந்தனையுடன் செய்து வருகிறார் முதல்வர். எல்லோருக்கும் எல்லாம் என்பது போல எல்லா ஊருக்கும் எல்லாம் என்று திட்டங்களை தருகிறார் முதல்வர். இது தான் திராவிட மாடல் அரசு என்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது” என பேசினார்.