விருப்ப ஓய்வு இறுதிநாள் கெடு விதித்து அடுத்த அறிவிப்பு வெளியிட்ட பிபிசிடி நிர்வாகம்; கவலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள்
தேயிலை தோட்ட பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் பிபிடிசி நிர்வாகம் இறங்கி இருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மறைமுகமாக தொழிலாளர்கள் வெளியேற மிரட்டல் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் தேயிலைத்தோட்ட நிர்வாகமான பிபிடிசி விருப்ப ஓய்விற்கான இறுதி நாள் குறித்த நான்காவது நோட்டீசை இன்று வழங்கியுள்ளது. அதில் தொழிலாளர்கள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பத்தை பிபிடிசி கம்பெனி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனை தொழிலாளர்கள் பெற்று சமர்பிப்பதற்கான கடைசி நாள் 14.06.24 என்பது அறிவிக்கப்படுகிறது. விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் தீர்வு ஒப்பந்தத்தின்படி இறுதி நாள் 15.06.24 என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேலும் விருப்ப ஓய்வு விண்ணப்பித்த தொழிலாளர்கள் தங்களது பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற நாளையும் மற்றும் அந்நாளில் நிர்வாகத்தின் தொழிலாளர்கள் என்பதிலிருந்து விடுவிக்கப்படுவதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசில் சட்டப்படியிலான அனைத்து தொகைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளபடி விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்களின் கணக்கில் bbdc கம்பெனியால் விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்ட கடிதம் வழங்கிய பின்பு 25 சதவீதம் மட்டுமே கருணைத்தொகையுடன் வரவு வைக்கப்படும். 25 சதவீத கருணைத்தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தீர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னரே வழங்கப்படும். விருப்ப ஓய்வு விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் வசம் உள்ள நிர்வாகத்தின் அனைத்து உடைமைகளையும் சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்கள் தங்களது குடியிருப்புக்காக வழங்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளை காலி செய்து இறுதி நாளில் 45 நாட்களுக்குள் அல்லது ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அவ்வாறு தங்களது குடியிருப்புகளை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 75 சதவீத கருணைத் தொகையானது விருப்ப ஓய்வு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்படி முழு மற்றும் இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பம் பெறப்படும் என பிபி டி சி நிர்வாகம் தற்போது வழங்கியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எவ்வளவு சீக்கிரம் வெளியேறுகிறார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு பண பலன்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டு அவர்களை விரைவாக தேயிலை தோட்ட பகுதியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் பிபி டி சி நிர்வாகம் இறங்கி இருப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மறைமுகமாக தொழிலாளர்கள் வெளியேற மிரட்டல் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது. இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. எனவே நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை நாலுமுத்து காக்காச்சி ஆகிய பகுதிகளை உள்ள தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குத்தைக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும் தற்போது முதலே மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. தேயிலை தோட்டத்தில் உள்ள பொருட்களை கீழே கொண்டு வருவதற்கே பல மாதங்கள் தேவைப்படும் என்பதால் தான் முன்னதாகவே தொழிலாளர்களை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பல தலைமுறையாக வசித்து வரும் மக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்தி வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.