ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு; முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார்- எல்.முருகன் குற்றச்சாட்டு
காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.
நெல்லை மாவட்ட பாஜக பிரமுகர் பாண்டியன் இல்ல திருமண விழா சாந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் முருகன் கூறும்போது, ''தமிழக ஆளுநர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை திமுக வழக்கறிஞர்கள் இரண்டு பேர்தான் ஜாமீன் எடுத்துள்ளனர். ஜாமீன் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் இரண்டு பேரும் திமுகவில் பொறுப்பில் உள்ளனர். இதில் திமுக துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு விசாரணையை திசை திருப்பும் விதமாக செயல்படுகிறது.
முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார்
திராவிட முன்னேற்ற கழகம் இந்திய அரசியல் அமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. தமிழகத்தில் முதல் குடிமகனாக இருக்கும் ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது.
ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன ? என்பதை சிபிஐயோ அல்லது NIAயோ விசாரித்தால் தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும். கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக தமிழக அரசு மூடி மறைக்க பார்த்தனர். ஆனால் NIA விசாரணை வந்த பிறகுதான் பல குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் குற்றவாளிகள் மீதும் அவர்கள் பின்புலத்தில் இருப்பவர்கள் மீதும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் திமுகவினர் பின்னணியில் உள்ளனர். எனவே சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை நிலையை கொண்டு வர முடியும். ஆளுநர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியலமைப்பின் மீது தாக்குதல்.
பழிவாங்கும் செயல்
திமுகவினருக்கு அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது. அரசியல் அமைப்புப்படி செயல்படும் ஆளுநரை தரைக்குறைவாக விமர்சனம் செய்வது, ஒருமையில் பேசுவது இதெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசியலில் நாகரீகமான அரசியல் இருக்க வேண்டும். ஆளுநரை ஒருமையில் பேசுவது திமுகவினர் மற்றும் அவர்களது கூட்டணி கட்சியினர் மட்டுமே பேசி வருகின்றனர். தமிழக அரசு பாஜகவினர் மீது பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தமாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.