(Source: ECI/ABP News/ABP Majha)
தொழில் ரீதியான கூலிப்படையினர் இதை செய்திருக்க கூடும் - காங். ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி
காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலையை சாதாரண கோபத்தில் யாரும் செய்ய முடியாது. தொழில் ரீதியானர்கள் மட்டுமே இதை செய்ய முடியும்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்தவர் கரைசுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே ஜெயகுமார். இவரை கடந்த 2ம் தேதி காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் தலைமையில் போலீசார் ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வெளியான கடிதங்கள் அரசியல் புள்ளிகளின் பணவரவு, செலவு குறித்து குறிப்பு எழுதியதை தொடர்ந்து போலீசாரின் புலன்விசாரணை தீவிரப்ப்டுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி அவரது கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "மறைந்த கேபிகே ஜெயக்குமார் ஒரு சிறந்த செயல் வீரர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். காமராஜருக்கு இந்த குடும்பத்தார் மிகவும் நெருக்கமானவர்கள். ஜெயக்குமார் தந்தை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்தவர். அவர் மறைந்து போயிருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. முதலில் இது தற்கொலை என செய்தி கிடைத்தது. ஆனால் இப்போது இது திட்டமிட்ட கொலை என தெரிய வருகிறது. அவரை கொலை செய்து விட்டு எரித்தார்களா? அல்லது எரித்த இடத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது புரியவில்லை. தொழில் ரீதியான கூலிப்படையினர் இதை செய்திருக்க கூடும். இதைப் போன்ற காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலையை சாதாரண கோபத்தில் யாரும் செய்ய முடியாது. தொழில் ரீதியானர்கள் மட்டுமே இதை செய்ய முடியும். தமிழக காவல்துறை கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.. தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று கருதுகிறேன்.
ஒரு அமைதியான தேசிய இயக்கம் இந்த இயக்கத்தில் பணியாற்றிய தோழருக்கு இதைப் போன்ற முடிவு வந்தது மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாரின் துக்கத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். எந்த வித அனுமானத்திலும், எந்தவித அரசியல் லாபத்திற்காகவும் அரைகுறை விசயத்தை வைத்துக்கொண்டு நாம் எந்த கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால் கொலை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயமாக இருக்கிறது.. கட்சியை சேர்ந்தவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்தது குறித்த கேள்விக்கு, அவர்களுக்குள் எதை போன்ற நட்பு இருந்தது. எப்படி அவர்கள் பழகினார்கள் என முழுமையாக தெரியாது. ஆரம்பத்தில் சொன்னது போல அரசியலாக்க விரும்பவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. காவல்துறைக்கு தான் இது சவாலான விசயம். அவர்கள் தான் இந்த ரகசியத்தை மீட்டெடுக்க வேண்டும். மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறை. இதில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் காரணம் காவல்துறை மிகக் கடுமையாக விசாரித்து வருகிறது. எனவே இதில் விரைவில் முடிவு வரும் என நம்பிக்கை உள்ளது. என்னிடம் அவர் இது குறித்து பேசவில்லை. அவர் எனக்கு மிகச்சிறந்த நண்பர், அளவாக தான் பேசுவார். யாரைப் பற்றியும் குறை கூற மாட்டார். நல்ல எழுத்தாற்றல் மிக்கவர்" எனத் தெரிவித்தார்.