கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணு மாலையன் கோயிலில் மார்கழி மாத தேர்த்திருவிழா கொடியேற்றம்
தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கொடியேற்றத்தை கண்டு களித்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணு மாலையன் சுவாமி திருகோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கேராளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிகளில் சுசீந்திரம் அருள்மிகு தாணு மாலைய சுவாமி திருகோவிலும் ஓன்று. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் சுசீந்திரத்தில் தவம் செய்தனர். இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர். அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர். இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர்.
பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி மாத தேர் திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தந்திரிகள் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் திருகொடியேற்றம் செய்து வைத்தனர். இன்று முதல் பத்து நாட்கள் விழாவில், மக்கள் மார் சந்திப்பு, சிறப்பு பூஜைகள், சுவாமி பல்லகில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சி நடைபெற உள்ளது.இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கொடியேற்றத்தை கண்டு களித்தனர். ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஞாயிறு அன்று நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்படவில்லை.