கொட்டும் மழையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள்!
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதி யில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப் படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.பைபர் வள்ளங்கள் மாலை கடலுக்கு சென்று விட்டு மறுநாள் காலை கரை திரும்பும்.சில வள்ளங்கள் காலையில் சென்று அன்று மதியமே கரை திரும்பும்.
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதி யில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. காற்று வீசவில்லை.இதனால் வழக்கம்போல் கடலுக்கு சென்ற வள்ளங்கள் காலை கரை திரும்பின. இதில் நெத்திலி, அயலை, சாளை, ஊளா போன்ற மீன்கள் கிடைத்தன. காலையிலும் தூறல் மழையில் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன.இவற்றுள் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன.
அவைகளை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1300 வரை விலை போனது. இதனை உள்ளூர் மீன் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கடந்த வாரத்திற்கு முன்பு ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.700 முதல் ரூ.1000 வரைதான் விலைக்கு போனது என்பது குறிப்பிட்டத்தக்கது. இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கரைமடி வலைகள் மூலம் அருகில் மீன்பிடித்து கரை திரும்பும்போது மழையால் தொழில் பாதிக்காது. காற்று வீசினால்தான் கட்டுமரங்கள் கடலுக்கு செல்ல முடியாது. நேற்று மழை மட்டும் பெய்தது.
காற்று வீசவில்லை. அதனால்தான் கரைமடி மரங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றன என்றார். கடலில் கவரமடி வலையை கட்டுமரம் முலம் அதிகாலையில் கடலுக்குள் வீசி வருவார்கள். பின்பு வீசிய வலையை சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இழுப்பார்கள் அதில் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இன்று கரைமடி வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்ததில் நெத்திலி மற்றும் சாலை மீன்கள் ஏராளமாய் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.