ISRO: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம்
சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கும்.
![ISRO: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம் ISRO started construction of rocket launch pad at Kulasekaranpatnam TNN ISRO: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துவக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/02482d1a53163edf6b527be6cd6a6f111686372305354739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியது. முதற்கட்டமாக ரூ.6¼ கோடியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாடு விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதுடன் வர்த்தக ரீதியாக வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகின்றது. இதனால் ராக்கெட் ஏவுதளத்தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, நமது நாட்டில் கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பது அவசியம்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியானது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. இது நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்துள்ளது. இதனால் குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். இதன்மூலம் நமது நாட்டின் அருகில் உள்ள இலங்கையின் வான் எல்லைக்குள் செல்லாமல், ராக்கெட்டுகளை எளிதில் விண்வெளியில் நிலைநிறுத்த முடிவதுடன் எரிபொருள் சிக்கனமும் கிடைப்பதால் செலவு குறையும்.
எனவே, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் வகையில், அங்குள்ள கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தும் பணி நடந்தது. இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலமும், மீதம் உள்ள பட்டா நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் சோம்நாத் குலசேகரன்பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக உரிய அனுமதிகளை பெற்று ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் அதனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் 6 கோடியே 24 லட்சம் திட்ட மதிப்பீட்டில் இ-டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜூன் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி பிற்பகல் ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதியான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இதுதொடர்பாக பணி ஆணை வழங்கப்பட்ட 15 நாட்களில் இருந்து 11 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளை தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)