“நீட் விவகாரத்தில் இலக்கை எட்டும்வரை போராட்டம் தொடரும்” - கனிமொழி எம்பி காட்டம்
”ஜேபி கார்ப்ரேட்டுகளுக்காக ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்”
நீட் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்து போட மறுக்கும் ஆளுநரை கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி மருத்துவரணி ஆகியவை சார்பில் தமிழக முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நெல்லையில் நெல்லை மத்திய மாவட்ட மற்றும் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி ,மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் பாளையங்கோட்டை சித்த அரசு கல்லூரி முன்பு மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் டி.பி.எம். மைதீன் கான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ”சாதாரண மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியாகும். தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் பாஜக அரசுக்கு முடிவு கட்டும் முதல் தொடக்கம்தான் இந்த போராட்டம். 2024- ல் பாராளுமன்ற தேர்தலில் நமது I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும். அப்போது தீர்மானிக்கும் இடத்தில் திமுக இருக்கும். அப்போது நீட் தேர்வு அகற்றப்படும் அதுவரை போராட்டம் தொடரும்" என கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றிய போது, “திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும் நிலையிலும் சமூக நீதிக்காகவும் நமது மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் ஒரு போராட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் இந்த போராட்டம் மாணவர்கள் எழுச்சி போராட்டமாக மக்களின் எழுச்சி போராட்டமாக மாற வேண்டும். மீண்டும் இந்தப் போராட்டத்தை கையில் எடுக்க காரணம் நீட் தேர்வு காரணமாக தந்தை மகன் இருவரும் தங்களது வாழ்க்கை முடித்துக் கொண்டுள்ளனர். இப்படி துயர துக்க சம்பவங்கள் பற்றி கவலைப்படாமல் இந்த மாநிலத்திற்கு ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் இந்த மனிதர்களின் வருத்தம், துயரம், துக்கம் என எதையும் பொருட்படுத்தாமல் நீட் மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன். இந்த பிரச்சனையில் தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என திமிராக பேசி வருகிறார். இப்படிப்பட்டவர்கள் தான் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். பாஜக அரசு தொடர்ந்து நீட் விவகாரத்தில் தெளிவாக பொய் சொல்லி வருகிறது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாவட்ட தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். ஆனால் இன்று ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாத நிலை உருவாக்கி உள்ளது. வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது. பிஜேபி கார்ப்ரேட்டுகளுக்காக ஒரு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் தேர்வாக முடியாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதலமைச்சரும் நீட் தேர்வை எதிர்த்து கொண்டிருக்கிறார். அதற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக தமிழ்நாடு தான் அடைய நினைக்கும் இலக்கை ஒரு நாள் அடைந்தே தீரும். அதற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கனிமொழி எம்பி கூறும் போது, மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்தில் ஒரே எண்ணைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இறந்த 86 பெயர்களின் பெயரில் சிகிச்சை அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று 5 சுங்கச்சாவடிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 123 கோடி ஊழல் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று பல துறைகளில் ஊழல்கள் நடந்துள்ளது என்பதை சிஏஜி அறிக்கை கூறியுள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.