குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!
96 லட்சம் மதிப்பீட்டில் 55 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 8 பேட்டரி வாகனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன, எஞ்சிய வாகனங்கள் பழுந்தடைந்து ஓரங்கட்டப்பட்டன
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறிய ஆட்டோ வடிவிலான 52 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பேட்டரி வாகனத்தின் விலையானது 1 லட்சத்து 85 ஆயிரம் விகிதம் 96 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கப்பட்டன. முதல் 6 மாதங்கள் வரை இந்த வாகனங்கள் நன்றாக ஓடிய நிலையில், பின்னர் பேட்டரி பழுது ஏற்பட்டு ஓரங்கட்டப்பட்டன. அவ்வப்போது பழுதான வாகனங்கள் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்பொழுது 52 வாகனங்களில் 8 வாகனங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டில் உள்ளன. மற்ற 44 வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், பசுவந்தனை சாலையில் உள்ள பூங்கா பகுதியில் குப்பை கிடங்கு போல பேட்டரி வாகனங்கள் காட்சி பொருளாக மாறியுள்ளது. பல வாகனங்களில் டயர்கள், டோர்கள் மற்றும் பேட்டரிகள் என எதுவும் இல்லமால் உள்ளது. சில பேட்டரி வாகனங்கள் அப்பளம் போல காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்ற வாங்கப்பட்ட வாகனங்கள் தற்பொழுது குப்பையில் கிடக்கும் அவல நிலையில் உள்ளது.
இதற்கிடையில் சமூக ஆர்வலர் முருகன் என்பவர் மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட இந்த பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றிக்கு புகார் மனு அனுப்பினார். இதையெடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை முருகன் மனு மீது விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மக்கள் நீதமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஒரு மாதகாலத்திற்குள் சரி செய்து அனைத்து பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை அதனை இயக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேட்டரி வாகனங்கள் பழுது என கூறி ஈரோட்டில் இருந்து பழுதுபார்க்கும் நபர்களை அழைத்துவந்து பழுது பார்க்கின்றனர். ஆனால் பழுது பார்த்த மறுநாள் அந்த வாகனங்கள் இயங்குவதில்லை என்றும், எனவே பேட்டரி வாகனங்களை பழுது பார்க்க நகராட்சி அலுவவலக வளாகத்தில் பழுது நீக்கம் மையம் அமைத்து பேட்டரி வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவில்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து இருப்பது குறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது, பழுதான வாகனங்களின் பழுது நீக்குவதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த விபரங்கள் வந்தததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.