‘விலையில்லா அரிசி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கும் தமிழ்நாடு’ - அப்பாவு பெருமிதம்
கூட்டுறவு துறை மூலம் விலையில்லா அரிசி வழங்கப்படுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாடு தான் இருக்கிறது.
69 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் விழா பேருரையாற்றி பேசுகையில், “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முதலாக விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் பயிர் கடன் கொடுக்கும் திட்டம் டாக்டர் கலைஞரால் தான் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னாள் மின்கட்டணம் இல்லாமல் விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கொண்டு வந்ததும் கலைஞர் தான். இந்தியாவிலேயே முதன்முறையாக கூட்டுறவுத்துறை மூலம் ரேசன் பொருட்கள் எல்லாருக்கும் கிடைக்கிற திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது என்றால் அதுவும் தமிழ்நாட்டில் தான். கூட்டுறவு துறை மூலம் விலையில்லா அரிசி வழங்கப்படுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாடு தான் இருக்கிறது. எந்த திட்டங்கள் என்றாலும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கிறது என்றால் அது பேரறிஞர் அண்ணா, கலைஞர், தற்போது மு.க.ஸ்டாலின் நாட்டுக்காக நற்பணியாற்றி வருகின்றனர். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பயிர்க்கடன் வட்டியில்லாமல் வழங்கும் ஒரு மாநிலம் தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் இருக்க முடியாது. ஆட்சி பொறுப்பேற்ற இந்த முதல்வர் பயிர்க்கடன் அனைத்தையும் ரத்து செய்த பெருமைக்குரியவர்.
அதுமட்டுமின்றி 5 சவரன் நகைக்கு குறைவாக அடகு வைத்தவர்களுக்கு முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சம் பேர் பயனுடைந்துள்ளார்கள். அதே போல பயிர்க்கடன் பெற்றவர்கள் 16 லட்சம் பேர் பயனுடைந்துள்ளார்கள். எனவே இந்த அரசு சாமானியர்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு, விவசாயிகளுக்கான அரசாக இருக்கும் காரணத்தால் மக்களை பற்றி சிந்தித்து இதனை செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் கறவை மாடு வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முதலாக சுய உதவி குழுக்களுக்கு உயிரூட்டியவர் கலைஞர் தான். அவர் வழியில் வந்த முதல்வர் ஸ்டாலின் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனை ரத்து செய்துள்ளார் என்று பேசினார்.
தொடர்ந்து விழாவில் 953 பயனாளிகளுக்கு 6 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் கூட்டுறவு வாரவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்