மாநில அரசு பேரிடரை சரியாக கையாளவில்லை.. எந்த சபையிலும் சொல்ல தயார் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!
”நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது மன வேதனை அடைந்தேன். ஆய்வு செய்தது தொடர்பாக பெரிய அறிக்கையை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இடம் வழங்க உள்ளேன்”
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை சிந்து பூந்துறை பகுதியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிவாரண பொருட்களையும் வழங்கினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும்போது, ”தென் தமிழகத்திற்கு வருவது என்றாலே எப்போதும் மகிழ்ச்சி தரும். ஆனால் இப்போது மிகவும் கவலையுடன் வந்துள்ளேன். குடியரசு தலைவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்ததால் அவருடன் இருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அவர் சென்றவுடன் நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வந்துள்ளேன். நான் பார்வையிட்ட பல இடங்களும் மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது.
பல கண்மாய்கள் குளங்கள் சேதமடைந்துள்ளது. குளங்கள் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நான் நேரடியாக சொல்கிறேன் தமிழக அரசு இன்னும் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஒன்று வானிலை ஆராய்ச்சி மையத்தை குறை சொல்கின்றனர். இன்னொன்று மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை என்கின்றனர். அவர்கள் சொல்லியும், மத்திய அரசு கொடுத்தும் தான் நான் உதவி செய்வேன் என்றால் நீங்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பினார்.
”ஏரலில் வியாபாரிகள் சொல்லும்போது எங்களுக்கு ஒரு சின்ன முன்னறிவிப்பு வந்திருந்தால் நாங்கள் கடையை வியாபாரத்தை காப்பாற்றியிருப்போம் என சொல்கின்றனர். முதலமைச்சர் ஒரு மணிநேர முதலமைச்சர் ஆகிவிட்டார். இவ்வளவு பாதிப்பிற்கு ஒரு மணிநேரம் இங்கு நேரம் கொடுக்க முடிந்தது. ஆனால் அது சரியல்ல, இது சரியல்ல என சொல்கிறார்கள். இது திராவிட மாடலா? திண்டாட்ட மாடலா என சொல்லுகிற அளவிற்கு மிகுந்த கவலையில் உள்ளேன். இதை மனதில் இருந்து சொல்கிறேன். இதனை சொன்ன உடனே சேகர்பாபு சொல்கிறார் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுவதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று. உங்களுக்கு எப்போது ஓட்டு, போட்டிதானா? அதற்கு மேல் சிந்திக்க மாட்டீர்களா?” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”நான் மனிதாபிமான உணர்வோடு எனது சகோதர சகோதர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வந்துள்ளேன். உங்களுக்கு மக்களை பற்றி இப்போது கவலையில்லை. நாங்க ஏன் வந்தோம் என்று தான் கவலை. உதயநிதியை தற்போது எதிரில் பார்த்தேன், யார் அப்பா வீட்டு கார் இத்தனை போகின்றது என தெரியவில்லை. முதல்வருக்கு பின்னால் போகும் கார்களை விட உதயநிதி காருக்கு பின்னாலும் அதிக அளவு கார்கள் அணிவகுத்து செல்கிறது. தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களை அவர்கள் பாதுகாத்திருக்க வேண்டும்” என்பது எனது கருத்து என்று தெரிவித்தார்.
மத்திய அரசு உடனடியாக ஆயிரம் கோடியை அவசரகால நிவாரணமாக வழங்கி உள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் நான் அல்ல, மக்களுக்கான செய்தி தொடர்பாளர் நான். பார்வையிட்ட பாதிப்பை யாரிடம் எப்படி சொல்ல வேண்டுமோ அவர்களிடம் அப்படி சொல்லி முறையான நிவாரணத்தை பெற்று தருவேன். ஆளும் கட்சிக்காரர்கள் வீட்டில் தான் அனைத்து நிவாரண பொருட்களும் அதிக அளவில் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். என் ஊரு பாதிக்கப்பட்டிருக்கிறது நான் வரேன், சேகர்பாபுவிற்கு என்ன? ஏன் சேகர்பாபுவிற்கு பதற்றம் என தெரியவில்லை எப்போதும், வாக்கு தேர்தல் என போக்கு சொல்லி வருகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது, அதை அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அதை அறிவித்தால் என்ன செய்வீர்கள்? அறிவித்தால் மட்டும் கூடுதல் நிதி அல்ல. எவ்வளவு நிதி தேவையோ மத்திய குழு சொல்வதை கொடுக்க போறோம், சென்னையில் 4 ஆயிரம் கோடியை வைத்து என்ன செய்தீர்கள்?” என்றார்
நிதி கொடுத்தால் எந்த அளவிற்கு பணம் செலவழித்து பணி செய்வார்கள் என்பதை 10 கோடி, 12 கோடி என செலவழித்து இடிந்து கிடக்கும் பணியை பார்த்தாலே தெரிகிறது. சென்னையில் பெய்த அதிக கனமழையை வைத்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழையில் பணி செய்திருக்க வேண்டும். முதல்வர் மக்களின் பாதிப்பை பார்த்திருக்க வேண்டும். ஆனால் கோவை அரசு விழா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்பு என சென்று விட்டார். முதல்வர் வந்தால் ஒன்றுதான் உதயநிதி வந்தால் ஒன்றுதான் என்பதைப்போலதான் உள்ளது இப்போது பார்க்கும் காட்சிகள் அனைத்தும். இன்று பார்வையிட்ட பாதிப்படைந்த பகுதிகள் தொடர்பான பெரிய அறிக்கையை தயார் செய்து பிரதமரிடமும், நிதி அமைச்சர் இடமும் கடிதமாக கொடுக்க உள்ளேன் என்றார்.
உதய நிதி அண்ணா எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசுவார். பெரியார் எங்க பேசனுமோ அங்கு பேசுவார், கலைஞர் எப்படி பேசனுமோ அப்படி பேசுவார். ஒரு அமைச்சராக இருந்து அவர் இப்படி பேசுவதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், அவருக்கு எல்லாம் எளிதாக கிடைத்துவிட்டு, கஷ்டப்பட்டு அவர் வரவில்லை என்று விமர்சித்தார். மாநில அரசு இந்த பேரிடரை சரியாக கையாளவில்லை என்று எந்த சபையிலும் சொல்ல தயார் என்று தெரிவித்தார்.