தாமிரபரணியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் - கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய அவல நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை
திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான சாகுபடி அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. குறிப்பாக தாமிரபரணி மணிமுத்தாறு ஆற்றுக்கால் பாசன விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை துவங்க உள்ள நிலையில் இதுவரை போதுமான அளவிற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலை உள்ளது. பல்வேறு இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள பொட்டல், பாளையங்கோட்டை, படப்பைகுறிச்சி, மூலிக்குளம், கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாளையங்கால்வாய் நீர் பாசனம் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
இங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தில் ஏற்கனவே நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறும் நிலையில் ஏற்கனவே இருந்த நெல் கொள்முதல் நிலையத்தை எந்த வித அறிவிப்பும் இன்றி எடுத்து விட்டதால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறி நெல் மூட்டைகளோடு நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர், முன்னதாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூறி வேளாண்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவட்டிக்கையும் எடுக்கவில்லை, ஆள் பற்றாக்குறை, இயந்திர பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை கூறி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை அமைக்கவில்லை என கூறி ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்,
ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கூறும் பொழுது, வயிலில் அறுவடை செய்த நெல் மணிகளை அடுக்கி வைத்து உள்ளோம், ஆனால் அவை அனைத்திலும் வண்டுகள் ஆக்கிரமித்து நெல் வீணாகி வருகிறது, எனவே உடனே நெல் கொள்முதல் நிலையம் அமைத்து மாவட்ட நிர்வாகம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள அனைத்து நெல்களையும் தாமிரபரணி ஆற்றில் கொட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்,
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றிற்கு நெல் மூடைகளை எடுத்து சென்ற அவர்கள் தாங்கள் விளைவித்த நெல்லை தாமிரபரணி ஆற்றில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய அவல நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.