நெல்லை: மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே கருகிய ஊழியர்..! அதிகாரிகளின் அலட்சியம் காரணமா..?
மணிகண்டன் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனவும், போதிய பாதுகாப்பு இன்றி பணியில் ஈடுபடுத்தியதாகவும் கூறி போராட்டம் நடத்தினர்.
நெல்லை டவுண் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் மின்வாரிய துறையில் எவ்விதமான கட்டமைப்புக்கும் உட்படாமல் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் மணிகண்டன் இன்று நெல்லை கங்கைகொண்டால் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின் கம்பத்தில் ஏறி மின்சார பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் மின் கம்பத்தில் அமர்ந்திருந்தவாறே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கங்கை கொண்டான் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த தகவலறிந்த கங்கைகொண்டான் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பத்தில் உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிகண்டன் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனவும், போதிய பாதுகாப்பு இன்றி பணியில் ஈடுபடுத்தியதாகவும் கூறி போராட்டம் நடத்தினர். மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு உயிரிழந்த மணிகண்டனின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முழு மின்தடை என அறிவிக்கப்பட்டு மின்சாரத்துறை பணிகள் நடைபெற்ற போது எப்படி அவர் உயிரிழந்தார் என்றும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிர் இழந்த மணிகண்டனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்