நெல்லை டவுண் ரத வீதியில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டரால் பரபரப்பு..! அலறியடித்த மக்கள்..!
ரத வீதி முழுவதும் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் இதர கடைகளை சோதனை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நெல்லை டவுண் என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. முக்கிய வணிக நிறுவனங்கள், கோவில், என முக்கியமான அனைத்து வர்த்தக பகுதிகளும் அங்கு தான் அமைந்துள்ளது. அதோடு பண்டிகை தினங்கள், விடுமுறை நாட்கள் என்றால் அப்பகுதியில் மக்கள் தலைகளாக தெரியும் அளவிற்கு ரத வீதிகள் அனைத்தும் களைகட்டியே இருக்கும். இந்த நிலையில் டவுண் வடக்கு ரத வீதியில் வணிக நிறுவனங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் பகுதியில் ஷேக் அலி என்பவர் சமோசா கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் மாரியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மாலையில் திடீரென எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது.
தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் ஒரு சில நிமிடங்களிலேயே கசிவு ஏற்பட்ட சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை சற்றும் எதிர்பாரத மக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட துவங்கினர். மேலும் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர் விபத்தால் ஊழியர்கள் அங்கு இருந்தவர்கள் என 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிய நிலையில் சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர். எனினும் அருகில் உள்ள பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றிய நிலையிலும் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வருகிற ஜூன் 21 ஆம் தேதி நெல்லையில் மிகவும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோடம் நடைபெற உள்ளது. நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து தேர் நிலைக்கு நிற்கும் நிலையில் வடக்கு ரத வீதியில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரத வீதி முழுவதும் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் இதர கடைகளை சோதனை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து திருநெல்வேலி தீயணைப்பு நிலையத்தினர் தெரிவிக்கும் போது, இது போன்ற தீ விபத்து இடங்களில் நின்று வேடிக்கை பார்ப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். பொதுமக்கள் செல்போனில் படம் பிடிக்கவோ அல்லது உதவி செய்யும் நோக்கத்திலோ அருகில் சென்று விடக்கூடாது. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இது போன்ற இடங்களில் வைக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் உடனடியாக வகுக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக இருக்கிறது