தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வெளியே தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திரண்டனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, ஹரிராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன், மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர்கள் மாரிச்செல்வம்,ஆம் ஆத்மி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன், தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி தலைவர் வியனரசு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் அப்பகுதியில் ஒன்று சேர்ந்தனர்.
பின்னர் அவர்கள் பிரதான சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டும் உள்ளே சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும் அனைத்து அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த சுமார் 100 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை அனுவை அளித்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உறுதியளித்தார். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையில், துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது.
சட்டப்பேரவையி்ல் முதல்வர் அளித்த உறுதிமொழியை அமல்படுத்த அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து, அந்த அரசாணையை திரும்ப பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், நெல்லை எஸ்பி சரவணன், ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை ஆகியோர் தலைமையில் கலவரத் தடுப்பு போலீஸார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட சுமார் 800 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மேலும், ஸ்டெர்லைட் ஆலை பகுதி, சுற்றியுள்ள கிராம பகுதிகள் மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனை தவிர தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீஸார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்களை அனுமதித்தனர்.தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2000 போலீஸார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.