தென்காசி தொகுதியில் மீண்டும் வெற்றியை உறுதி செய்தார் காங்கிரஸ் வேட்பாளர்...! கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!
மறுவாக்கு பதிவிற்கு பிறகும் தென்காசி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டது.
தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிட்டனர். மொத்தமாக 18 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் பழனிநாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88 ஆயிரத்து 945 வாக்குகளும் பெற்றிருந்தனர். 370 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தபால் வாக்குகளையும் கடைசி இரண்டு சுற்றுகளையும் மீண்டும் என்ன வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 10 நாட்களுக்குள் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 20 நிமிடங்கள் தாமதமாக 10.20 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மேற்பார்வையாளராக இருந்து வாக்கு எண்ணிக்கையை நடத்தினார். மூன்று முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 10 மணி நேரம் வாக்குகள் எண்ணப்பட்டது. முதலாவதாக தபால் வாக்குகளில் பெறப்பட்ட கெசட்டட் கையெழுத்து சரிபார்க்கப்பட்டு அவை பிரித்து வைக்கப்பட்டது. செல்லத்தக்கதாக இருந்த 2576 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பழனி நாடாருக்கு 1642 வாக்குகள் கிடைத்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 704 வாக்குகள் கிடைத்தது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 565 வாக்குகள் முன்னிலை வகித்த போதிலும் தபால் வாக்குகளில் 938 வாக்குகள் அதிகம் பெற்றதால் 373 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்கு எண்ணிக்கையில் கடந்த முறையை விட பழனி நாடார் கூடுதலாக 33 வாக்குகளும் செல்வமோகன்தாசுக்கு கூடுதலாக 30 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே காத்திருந்த திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் வெற்றியை கொண்டாடினர். மறுவாக்கு பதிவிற்கு பிறகும் தென்காசி சட்டப்பேரவை தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டது. மொத்தமாக பழனி நாடார் -89348 வாக்குகளும், செல்வமோகன் தாஸ் 88 ஆயிரத்து 975 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்