வல்லநாடு மலைப் பகுதியில் கொட்டப்படும் சீன பீங்கான் கழிவுகள் - மான்கள் உயிரிழக்கும் அபாயம்
மனிதர்களைக் கண்டாலே ஒருவித அச்சத்துடன் துள்ளிக்குதித்து ஓடும் குணமுடைய மான்கள் இந்த பீங்கான் பாத்திரக் குவியல்களில் சிக்கி காயமடையவோ உயிரிழக்கவோ வாய்ப்புகள் அதிகம்
தூத்துக்குடி வல்லநாடு மலைப் பகுதியிலிருந்து வெளிமான்கள் மேயும் நிலங்களில், இரவு நேரங்களில் உடைந்த அலங்கார சீன பீங்கான் பாத்திரங்களை லாரிகளில் மர்ம நபர்கள், குவியல் குவியலாக கொட்டிச் செல்கிறார்கள். மேய்ச்சலுக்கு வரும் மான்கள் இந்த குவியிலில் சிக்கி உயிரிழக்கும் அபாயம்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெளிமான்கள் சரணாலயம் உள்ளது. ’வெளிமான்கள்’ என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள். அரிய வகையான இந்த மான் இனத்தைக் காப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. 1,641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த இன மான்களை இங்கு தவிர தமிழகத்தில் கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களில் மட்டுமே காண முடியும்.
கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 243 வெளிமான்கள், 47 புள்ளிமான்கள், 30 கடமான்கள் உள்ளது. மேலும் முள்ளம்பன்றி, எறும்புத்திண்ணி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டு முயல், மரநாய், பாம்பினங்கள், தேள் வகைகள் மற்றும் 86 வகையான பறவையினங்களும் வாழ்ந்து வருகிறது. வல்லநாடுவில் இருந்து பேட்மாநகரம் மேட்டுப்பகுதி வரை உள்ள சமவெளிப்பகுதியில் வெளிமான்களும், புள்ளிமான்களும் மேய்ச்சலுக்காக வந்து செல்கின்றன.
பேட்மாநகரம் பகுதியில் தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இங்கு பள்ளமான பகுதிகளே அதிகம். மழைக்காலங்களில் பள்ளங்களில் தேங்கும் மழைநீரை, தாகத்திற்காக மான்கள் குடித்துச் செல்லும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லாரிகளில் எடுத்து வரப்படும் உடைந்த பீங்கான் பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலீத்தின் பைகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கிறார்கள். அருகில் கல்குவாரிகள் செயல்படுவதால் கல், ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்வதற்காக வருவது போல் இரவு நேரங்களில் வந்து கழிவுகளை கொட்டிச் செல்வது அவர்களுக்கு சாதகமாகிவிட்டது.
மனிதர்களைக் கண்டாலே ஒருவித அச்சத்துடன் துள்ளிக்குதித்து ஓடும் குணமுடைய மான்கள் இந்த பீங்கான் பாத்திரக் குவியல்களில் சிக்கி காயமடையவோ உயிரிழக்கவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இக்குவியல்களில் சிக்கிய மான்களை மர்மநபர்கள் வேட்டையாடிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த பலனுமில்லை. மட்காத இந்த பீங்கான் பொருட்களால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகளையும் இதே போல குவிலாகக் கொட்டினார்கள். இறைச்சிக்கழிவுகளை உண்ண படைத்த கழுகு உள்ளிட்ட பறவைகள் மின்கம்பங்களுக்கு இடையில் செல்லும் வயர்களில் சிக்கி உயிரிழந்தன. இதுபோன்ற கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.