குழந்தை கடத்தல் வதந்தி போஸ்டர் !! இருவரை கைது செய்து எச்சரித்த நெல்லை மாவட்ட காவல்துறை..!
பெற்றோர்கள் குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லது செய்கிறோம் என காவல்துறையின் பெயரை குறிப்பிட்டு தற்போது இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![குழந்தை கடத்தல் வதந்தி போஸ்டர் !! இருவரை கைது செய்து எச்சரித்த நெல்லை மாவட்ட காவல்துறை..! Child abduction rumour poster Tirunelveli district police arrest two people and warn them - TNN குழந்தை கடத்தல் வதந்தி போஸ்டர் !! இருவரை கைது செய்து எச்சரித்த நெல்லை மாவட்ட காவல்துறை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/4515c9e5f85df8e963f13e0829724a3e1710345867972571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதாகவும், பெற்றோர்கள் கவனமாக இருக்கும்படி தெரிவிக்கப்படுவதாகவும் காவல்துறை மற்றும் ஊர்பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக காவல்துறை கவனத்திற்கு சென்றுள்ளது. அப்போது காவல்துறையினர் அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறை விசாரணையில் நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் பகுதியிலுள்ள சுவர்களில் “ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!” என்ற பெயரில் ஒட்டியிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காவல்துறையின் அனுமதியின்றி இருவர் தாங்களாகவே இந்த போஸ்டரை ஒட்டியிருப்பது தெரியவந்துள்ளது.. குறிப்பாக சிவந்திபட்டி அருகே பற்பநாதபுரத்தை சேர்ந்த கோயில்பிள்ளை என்பவரது மகன் இமானுவேல் அந்தோணி (29) என்பவரும், பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (30) ஆகியோர் சேர்ந்து ஒட்டியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறை இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் எவ்வித உண்மையும் இல்லாமல் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி ஏற்படுத்தும் விதத்திலும் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் எவ்வித அனுமதியும் இல்லாமல் சுவரொட்டி ஒட்டியதாக காவல்துறைக்கு தெரியவந்தது. எனவே இது சம்பந்தமாக சிவந்திப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து மேற்படி இரு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடி நடவடிக்கைக்காக 100 என்ற எண்ணையோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுபோன்று பொது வெளியிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை முதலே குழந்தைகள் கடத்தல் தொடர்பாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் வேகமாக சமூக வலை தலங்களில் பரவியது. இந்த நிலையில் உண்மை சரிபார்ப்புக் குழு சார்பில் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டர் வதந்த் என்றும் பெற்றோர்கள் கவனமாக இருக்கக்கோரி காவல்துறை பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்லது செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையின் பெயரை குறிப்பிட்டு தற்போது இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)